< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?; மக்கள் கருத்து
வேலூர்
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?; மக்கள் கருத்து

தினத்தந்தி
|
22 Oct 2022 10:20 PM IST

போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய அபராத நடவடிக்கையால் தமிழ்நாடு சாலை விபத்தில் முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய அபராத நடவடிக்கையால் தமிழ்நாடு சாலை விபத்தில் முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்துகள் அதிகம்

தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிர்பலிகள் ஏராளம். சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. போக்குவரத்தினை முறையாக கடைபிடிக்காமல் வாகன ஓட்டிகள் செல்வது விபத்துக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்றதாகும். சாலைவிபத்தினால் உயிரிழப்பு மட்டுமில்லாமல் கை, கால்கள் போன்ற உறுப்புகளை இழந்து பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சாலை விபத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. விதிகளை பலர் கடைபிடிக்காமல் உள்ளனர். இந்தநிலையில் அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ளார்.

தற்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1000, செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் சென்றால் ரூ.1000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டுவரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை தமிழகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தற்போது புதிய அபராத தொகையை இ-சலான் கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா?, இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றி மக்கள் பார்வை வருமாறு:-

ஹெல்மெட் வாங்கி கொடுக்க வேண்டும்


வேலூரை சேர்ந்த பாண்டியன்:-அபராத தொகையை உயர்த்தினாலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வரை சாலை விபத்துகளை குறைக்க முடியாது. பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் விதிப்பதற்கு பணம் பெற்று அவர்களுக்கு அரசே ஹெல்மெட் வாங்கி கொடுக்க வேண்டும்.

இதனால் அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வருவது குறையும். அதேபோல் அவசர தேவைகளுக்காக சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகனங்களின் எண்களை குறித்துக்கொண்டு அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். மேலும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு அபராத தொகையை பெற்று அரசே இன்சூரன்ஸ் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். விபத்துகளுக்கு மிக முக்கிய காரணம் மோசமான சாலைகளே எனவே சாலைகளை சீரமைத்து, சீரமைக்கும் ஒப்பந்ததாரரே அதை பராமரிக்கும் பணியையும் குறிப்பிட்ட வருடங்களுக்கு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிடுகின்றனர். அதுபோல் மற்ற சாலை விதிகளையும் பின்பற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வரவேற்கத்தக்கது


வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சாந்தி:-சாலை விபத்துகளில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பது வருந்தத்தக்கது. போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதத்தொகையை அரசு உயர்த்தியது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றினாலே பெரும்பாலான விபத்துகள் குறையும், அதற்கு அரசு துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குண்டும், குழியுமான சாலைகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பத்துரை சேர்ந்த கல்பனா என்ற பெண் கூறியதாவது:-


ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் இதனை யாரும் இதுவரை பின்பற்றியது கிடையாது. இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோய் உள்ளது. தற்போது அரசு ஹெல்மெட் அணியாவிட்டால் ரு.1000 அபராதம் என்று அறிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் அணியாமல் செல்வது, ஆம்புலன்சுக்கு வழி விடாமல் செல்வது போன்றவற்றுக்கு அபராத விதித்து அரசு அறிவித்துள்ளது.. இதை மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் விபத்துகள் குறையும். விலை மதிப்பில்லா உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். விபத்தில்லா தமிழகமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். அரசு அறிவிப்போடு நின்று விடாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழைகளை பாதிக்கும்

ராணிப்பேட்டையை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கே.குணசேகரன்:-


போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராத தொகை பல மடங்கு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும் நடவடிக்கையாகும். அபராதம் விதிப்பது என்பது சட்டத்தை மக்களை பின்பற்ற வைக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் ஏழை எளிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்க கூடாது. உதாரணமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மட் அணியாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற நடவடிக்கை, வாகனத்தில் செல்லும் போது வழியில் லிப்ட் கேட்பவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி, அவர்களை பின்புறத்தில் அமரவைத்து செல்பவர்களுக்கு, தர்ம சங்கடத்தை உண்டாக்கி, லிப்ட் கொடுக்காமல் செல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தும். இதெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு இதை மறுபரிசீலனை செய்து, இதை வாபஸ் பெற வேண்டும்.

திருவண்ணாமலையை சேர்ந்த வினோத்:-


மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, அவர் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்று அபராத தொகையை அதிகரித்து உள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் விபத்துகள் பல தவிர்க்கப்படுவதோடு உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும். இத்துடன் நிறுத்தி கொள்ளலாம் அரசு பொதுமக்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி போலி ஹெல்மெட் விற்பனை செய்யவதை அரசு தடுக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ள ஹெல்மெட் மட்டும் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பாரபட்சமின்றி நடவடிக்கை


வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன்:- போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க போலீசார் சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது. எனினும் மக்களிடையே அச்சம் இல்லை. எனவே அபராதம் விதித்தும் மக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. எனினும் பலர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். அபராத தொகை உயர்த்தப்பட்டதால் அந்த தொகைக்கு ஹெல்மெட் வாங்கி விடலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வரும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். 28-ந்தேதி அபராத நடவடிக்கை அமலுக்கு வந்த பின்னர் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.




கனரக வாகனங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்படுமா?

ரூ.100 அபராதம் கட்டிவிட்டு நகருக்குள் வலம்

வேலூர் மாநகரில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சர்வசாதாரணமாக நகரில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தீபாவளி நேரம் என்பதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தடையை மீறி வரும் வாகனங்களுக்கு போலீசார் ரூ.100 அபராதம் விதிக்கின்றனர். இந்த அபராத தொகையை நகருக்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு என கனரக வாகன டிரைவர்கள் நினைக்கின்றனர். வெறும் ரூ.100 செலுத்தி விட்டு அதை கையில் வைத்துக் கொண்டு நகரில் வலம் வருகின்றனர். வேறு ஒரு இடத்தில் போலீஸ் மறித்தால் ஏற்கனவே கட்டப்பட்ட தொகைக்கான ரசீதை காண்பித்து அங்கிருந்து சென்றுவிடுகின்றனர். எனவே பகலில் நகருக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அதிக தொகை அபராதமாக விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்