தேர்தல் நேரத்தில் ரூ.50 ஆயிரம் எடுத்துச்செல்வதில் மாற்றம் வருமா.? சத்யபிரதா சாகு விளக்கம்
|தேர்தல் நேரத்தில் ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
சென்னை,
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நேரத்தில், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக வியாபாரிகளுக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதில் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் எனவும், விரைவில் ரொக்கப்பணம் கொண்டுசெல்வது குறித்த புதிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.