< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஏடிஎம் மையம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஏடிஎம் மையம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
3 Sep 2023 7:00 PM GMT

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னை, கோவை, திருச்சி போன்ற ரெயில் நிலையங்களுக்கு அடுத்தப்படியாக முக்கிய சந்திப்பாகவும் விளங்கி வருவது விழுப்புரம் ரெயில் நிலையம். தென்மாவட்டங்களை நோக்கிச்செல்லும் அனைத்து ரெயில்களும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை கடந்தே செல்கின்றன. இங்கிருந்து சென்னை, மதுரை, திருப்பதி, மயிலாடுதுறை, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதுடன், சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், குருவாயூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையம் வந்து செல்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையம் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. மொத்தம் 117 ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரெயில்கள் என 14 ரெயில்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றன.

ஏ.டி.எம். மையத்துக்கு மூடுவிழா

இந்த ரெயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் எந்நேரமும் விழுப்புரம் ரெயில் நிலையம் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் காணப்படுகிறது. இப்படியிருக்க இந்த ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் இல்லாதது பயணிகளுக்கு ஒரு பெரும் குறையாக உள்ளது. புதிய ரெயில் நிலைய கட்டிடம் கட்டுவதற்கு முன்பு பழைய ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்கும் மையத்தின் அருகிலேயே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் இருந்தது. ரெயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு இம்மையம் மிகவும் உதவிகரமாக இருந்தது.

ஆனால் புதிய ரெயில் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு பயணச்சீட்டு மையமும் அங்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு சில மாதங்களிலேயே பழைய பயணச்சீட்டு மையத்தின் அருகில் செயல்பட்டு வந்த வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அந்த ஏ.டி.எம். மையத்தை ரெயில் நிலைய புதிய கட்டிடத்தில் இயங்கச்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீண்டும் அமைக்கப்படுமா?

தற்போது பெரும்பாலான பயணிகள், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் ரெயில் பயணச்சீட்டு எடுத்து வருகிற நிலையில், இன்னும் பலர், ரெயில் நிலைய பயணச்சீட்டு எடுக்கும் மையத்திற்கு நேரில் சென்று பணம் கொடுத்து பயணச்சீட்டு எடுத்து வருவதை பார்க்கிறோம். அங்குள்ள பயணச்சீட்டு மையத்தில் கியூஆர் கோடு ஸ்கேன் வசதி வைப்பதில்லை. இதனால் பயணிகள் அனைவருமே வரிசையில் நின்று நேரடியாக பணம் கொடுத்துதான் பயணச்சீட்டு எடுத்துச்செல்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் இருந்தால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ஆனால் இங்கு ஏ.டி.எம். மையம் இல்லாததால் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள பழைய பஸ் நிலையம் வரையோ அல்லது கிழக்கு புதுச்சேரி சாலையில் மாதா கோவில் பஸ் நிறுத்தம் வரையோ ஏ.டி.எம். மையத்தை தேடிச்செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்குள்ள ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் இல்லாததால் வெளியூர்களில் இருந்து விழுப்புரம் வரும் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைகின்றனர். ஆகவே விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகள்