< Back
மாநில செய்திகள்
விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படுமா?
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படுமா?

தினத்தந்தி
|
21 Feb 2023 12:15 AM IST

விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

வளர்ந்து வரும் இன்றைய விஞ்ஞான உலகில் மக்களின் உணவு பழக்கங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப, நோய்களும் பெருகி வருகிறது. இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பு நகர பகுதிகளில் மட்டும் இருந்த ஆஸ்பத்திரிகள், தற்போது வீதிக்கு ஒன்று என்ற முறையில் பெருகி விட்டது.

பின்தங்கிய நிலை

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணையாக அரசு ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், ஏழை, எளிய மக்கள் அனைவரும் நாடி செல்வது அரசு ஆஸ்பத்திரிகளையே. ஆனால் அடிப்படை வசதிகளில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளின் நிலையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

உதாரணமாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் அரசு ஆஸ்பத்திரிக்கு விருத்தாசலம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாக இருக்கின்றனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை

இங்கு பொதுமருத்துவம், மகப்பேறு, சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ், எக்ஸ்-ரே, சித்தா, கண் மருத்துவ பிரிவு, ரத்த வங்கி, யோகா பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. கடந்த 2000-வது ஆண்டில் இந்த ஆஸ்பத்திரிக்கு தினசரி 100 பேர் வந்து சிகிச்சை பெற்று சென்ற போது 26 டாக்டர்கள் பணியாற்றியுள்ளனர்.

தற்போது இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துள்ளதே தவிர, டாக்டர்கள் அதே எண்ணிக்கையிலேயே உள்ளனர். மாதந்தோறும் சுமார் 360 பிரசவங்கள் நடக்கும் நிலையில், டாக்டர்கள் பற்றாக்குறையால் உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிற ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைப்பு

பிரசவம் பார்ப்பதற்கு போதிய டாக்டர்கள் இல்லாததால், அங்கு பிரசவத்திற்காக வரும் பெண்களை முண்டியம்பாக்கம், கடலூர், சிதம்பரம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதனால் மகப்பேறு பிரிவிற்கு மட்டும் 7 மகப்பேறு டாக்டர்கள், 7 குழந்தைகள் நல டாக்டர்கள், 7 மயக்கவியல் நிபுணர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மகப்பேறு பிரிவில் உயர்தர சிகிக்சை அளிக்க முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

வாரத்திற்கு ஒரு முறை வரும்...

மனநல மருத்துவர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகிறார். கண் மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் மட்டுமே உள்ளார். தோல் டாக்டர் கிடையாது. நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணர் இல்லாததால் விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் நரம்பியல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரை நியமிக்க வேண்டும்.

மேலும் சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து அதன் ரிப்போர்ட் கொடுப்பதற்கு 3 நாட்களுக்கு மேலாகி விடுகிறது. இதனால் நோயாளிகளுக்கு அவர்களின் நோயின் தன்மை அறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை. மேல்சிகிச்சைக்காகவும் பரிந்துரைக்க முடியாமல் டாக்டர்கள் அவதியடைகின்றனர்.

செயல்படாத அரங்குகள்

இதேபோல விபத்துகளில் கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வருபவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க எலும்பு முறிவு மருத்துவர்களும் இல்லை. ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் அவர் விடுப்பு எடுக்கும் தினங்களில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட உடன், மேல்சிகிச்சைக்காக நீண்ட தூரம் உள்ள விழுப்புரம், கடலூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். அவ்வாறு செல்லும் போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்த ஆஸ்பத்திரியில் கூடுதலாக 2 அறுவை சிகிச்சை அரங்குகள் ஏற்படுத்தப்பட்டாலும், போதுமான உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாததால் அந்த அரங்குகள் செயல்படவில்லை.

பாகுபாடு பார்க்கும் டாக்டர்கள்

மேலும் ஒரு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் இருக்கும் அனைத்து வசதிகளும் இங்கு இருந்தும், போதுமான இடவசதி இல்லை.

நாளுக்கு நாள் இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதனால் உள்நோயாளிகளை வைத்து சிகிச்சையளிக்க போதிய கட்டிட வசதிகளோ, படுக்கை வசதிகளோ இல்லை. இதனால் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.

இதுதவிர காப்பீடு திட்டத்தில் சேர்ந்த நோயாளிகளுக்கு ஒரு விதமான சிகிச்சையும், காப்பீடு திட்டத்தில் இல்லாத நோயாளிகளை சாதாரண வார்டுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் நடைமுறையும் பரவி வருகிறது. நோயாளிகளிடையே இந்த பாகுபாட்டை டாக்டர்கள் பார்க்க தொடங்கி இருப்பதால் ஏழை, எளிய மக்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சைகளை பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் நிலவும் அவல நிலை குறித்து விருத்தாசலத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

காட்சிப்பொருளான சுத்திகரிப்பு நிலையம்

மூர்த்தி: விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற வேண்டிய கழிவுநீர் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீர் வெளியேற வழியில்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டும், பயன்பாடின்றி காட்சிப் பொருளாகவே உள்ளது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இரவில் டாக்டர்கள் தங்கி பணிபுரிவதில்லை. அவசர சிகிச்சைக்கு சென்றால் டாக்டர்களுக்கு போன் செய்து அழைக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் கூடுதல் டாக்டர்களையும், ஊழியர்களையும் நியமிப்பதுடன், அடிக்கடி உயர்அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆஸ்பத்திரி சிறப்பாக செயல்பட துணை புரிய வேண்டும்.

கவுன்சிலிங் அளிக்க வேண்டும்

ரமேஷ்: செவிலியர் பற்றாக்குறை உள்ளது. துப்புரவு மற்றும் காவல் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியை தூய்மையாக வைத்திருந்தாலும், நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதை மாற்றிக் கொள்ள வேண்டும். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. அவசர சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை. தொழில்நுட்ப உதவியாளர்கள், செவிலியர்கள் நோயாளிகளிடம் தகராறில் ஈடுபடுவது போல் நடந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு முதலில் கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.

புதிய மருத்துவ கல்லூரி

சூசை ராஜ்: விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற வந்தால் டாக்டர்கள் வந்து பார்ப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடுகிறது. மாலை 4 மணிக்கு மேல் டாக்டர்கள் இருப்பதில்லை. காலை 9 மணிக்கு தான் டாக்டர்கள் வருகின்றனர். அதற்குள் மக்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது. குறைந்தது 50 டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களையாவது நியமிக்க வேண்டும்.

மேலும் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு விருத்தாசலம் புறவழிச்சாலையில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்கிட வேண்டும். தற்போது இருக்கும் அரசு ஆஸ்பத்திரியை மகப்பேறு மையமாக மாற்றிட வேண்டும். அப்போதுதான் ஏழை, எளிய மக்களுக்கு உயர் தர சிகிச்சை அளிக்க முடியும்.


மேலும் செய்திகள்