திருவாரூர்
விழல்கோட்டகம் தேவங்குடி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
|விழல்கோட்டகம் தேவங்குடி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே குண்டும், குழியுமான விழல்கோட்டகம் தேவங்குடி இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான இணைப்பு சாலை
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்திலிருந்து தேவங்குடி செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை அரசூர், கள்ளவாழாச்சேரி, சித்தாம்பூர், அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், தேவங்குடி, அரிச்சபுரம், கீழாலவந்தசேரி, மேலாலவந்தசேரி, பொதக்குடி, கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையை கடந்து தான் அந்த பகுதி கிராமப்புற பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வர வேண்டும். இந்த சாலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்த காடுகளாக காட்சி அளிக்கிறது.
சீரமைக்க வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள விழல்கோட்டகம் தேவங்குடி இணைப்பு சாலையை சீரமைத்து தார்சாலை அமைத்து தர வேண்டும். மேலும் சாலையின் இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.