திருவாரூர்
கிளைதாங்கி ஆற்றுப்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
|தில்லைவிளாகத்தில் கிளைதாங்கி ஆற்றுப்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
தில்லைவிளாகம்:
தில்லைவிளாகத்தில் கிளைதாங்கி ஆற்றுப்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாசனம் பெற்று வருகின்றன
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா தில்லைவிளாகத்தில் கிளைதாங்கி ஆறு உள்ளது. இந்த ஆற்று தண்ணீர் மூலம் தில்லைவிளாகம் கீழக்கரை, பள்ளியமேடு, மேலக்கரை, தில்லைவிளாகம் தெற்குகாடு, தொண்டியக்காடு போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டு, தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்து சேர்ந்தது.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்ட விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை மேற்கண்ட பகுதி மக்கள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் போதுமான அளவு தண்ணீர் வராததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு சாகுபடி செய்த வயல்களில் பயிர்கள் கருகின.
பாலத்தின்கீழ் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை
குறுவை சாகுபடிதான் கைகொடுக்கவில்லை, சம்பா சாகுபடியை தொடங்கலாம் என்ற நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களுக்கு ஆறுகளின் மூலம் கிடைக்கும் கொஞ்சம் தண்ணீரையும் ஆறுகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் உறிஞ்சி விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் தில்லைவிளாகம் கீழக்கரை கிளைதாங்கி ஆற்றுப்பாலத்தின் கீழ் தேங்கியுள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளில் விஷ பூச்சிகள் அதிக அளவில் உள்ளன.
அகற்ற நடவடிக்கை
இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறுவை சாகுபடி பொய்த்த நிலையில் சம்பா சாகுபடியாவது கைகொடுக்குமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பாசன வாய்க்காலான கிளைதாங்கி ஆற்றில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.