< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகள் முககவசம் அணியும் விஷயத்தில் சமரசம் செய்வதா?
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகள் முககவசம் அணியும் விஷயத்தில் சமரசம் செய்வதா?

தினத்தந்தி
|
18 Jun 2022 1:17 AM IST

பள்ளி மாணவ-மாணவிகள் முககவசம் அணியும் விஷயத்தில் சமரசம் செய்வதா?

கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் பயமுறுத்த தொடங்கியிருக்கும் நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் முககவசம் அணிய வேண்டும் என்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காற்றில் பறக்கவிடப்பட்ட நெறிமுறைகள்

கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த கல்வியாண்டின் இறுதியில் நேரடி வகுப்புகள் தொடங்கின. நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே நேரடி வகுப்புகள் நடந்தன. நாளடைவில் கொரோனா தாக்கம் மேலும் குறைந்ததால் வழிகாட்டு நெறிமுறைகள் அப்படியே மறைய தொடங்கின.பள்ளி மாணவ-மாணவிகள் முககவசம் அணிவது, ஒரு வகுப்பறையில் 20 முதல் 25 பேர் அமருவது போன்ற நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

நேரடி வகுப்புகள்

கோடை விடுமுறைக்கு பிறகு தஞ்சை மாவட்டத்தில் மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் கடந்த 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்து பாடங்களை கற்று வருகின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தொற்று குறைந்திருந்த நிலையில் கடந்த 1-ந் தேதியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இது உருமாறிய கொரோனாவாக தற்போது படையெடுத்துள்ளது.

இளம்பெண் பலி

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திகழ்ந்த தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு பிறகு திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இவருக்கு எந்த இணைநோய் பாதிப்பு இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. நேற்றுமுன்தினம் வரை 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் காற்றில் பறக்கவிடப்பட்டதால் மீண்டும் கொரோனா பயமுறுத்துவதற்கு வாய்ப்பை கொடுத்துவிட்டதால் தற்போது வந்துவிட்டது. கொரோனாவில் இருந்து தடுப்பூசி ஒரு பாதுகாப்பு என்றாலும், முககவசமும் கொரோனாவில் இருந்து நம்மை தற்காத்து கொள்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு பள்ளிகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தான் என்றாலும் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் நேரத்தில் அதற்கான தடுப்பு வழிமுறைகளை பள்ளிகளில் மேற்கொள்ள அறிவுறுத்தலாமே? என்ற வலியுறுத்தல் மேலாங்கி இருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணியாமல் தான் பள்ளிகளுக்கு செல்கின்றனர். தனியார் பள்ளிகளில் பலவற்றில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதால் அந்த பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றவுடன் முகக்கவசம் அணிந்து கொள்கின்றனர்.

தேவைப்பட்டால்

ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் ஒரு சிலர் மட்டுமே முககவசம் அணிந்து வருகின்றனர். பெரும்பாலானோர் முககவசம் அணியாமல் தான் பள்ளிகளுக்கு வருகின்றனர். அவர்களை முககவசம் அணிய சொல்லி ஆசிரியர்களும் கட்டாயப்படுத்துவது இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் முககவசம் அணியாமல் எப்போதும் போல் தனிநபர் இடைவெளி இல்லாமலும் பாடங்களை கற்று வருகின்றனர்.

இது பற்றி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது மாணவ-மாணவிகள் அவர்களின் பாதுகாப்புக்காக தேவைப்பட்டால் முககவசம் அணிந்து கொள்ளலாம் என்ற கல்வித்துறையின் உத்தரவை பின்பற்றுவதாக தெரிவிக்கின்றனர்.

வேண்டுகோள்

இப்போது நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் முககவசம் அணியும் விஷயத்தில் இதுபோன்ற சமரசம் செய்வது சரியா? தனியார் பள்ளிகள் காட்டும் அதே கெடுபிடியை உருமாறிய கொரோனா பரவிவரும் இந்த நேரத்தில் அரசு பள்ளிகளும் பின்பற்றினால் நோய் பாதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்காமல் ஒரு முற்றுப்புள்ளியை வைக்கலாமே என்று கல்வியாளர்கள் வேண்டுகோளாக வைக்கின்றனர்.

மேலும் தேவை என்றால் அணிந்து கொள்ளலாம் என்பதை விட கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அரசு பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெறும் பள்ளிகளில் மட்டும் பின்பற்றுவதோடு நிறுத்திவிடாமல் அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்