< Back
மாநில செய்திகள்
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் கட்டப்படும் மேம்பால பணி பருவ மழைக்கு முன்பு முடிக்கப்படுமா?
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் கட்டப்படும் மேம்பால பணி பருவ மழைக்கு முன்பு முடிக்கப்படுமா?

தினத்தந்தி
|
25 July 2023 11:49 AM IST

ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் கட்டப்பட்டு வரும் 2 மேம்பால பணிகள் பருவமழைக்கும் முன்பு முடிக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ளது ஒதப்பை கிராமம். இந்த கிராமத்தில் திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி பருவமழை காலத்தில் நிரம்பும் போது உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இதில் வெள்ளம் கரைப் புரண்டு ஓடும்போது ஒதப்பையில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவது வழக்கமாக உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் பாதுகாப்பு கருதி ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

அவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட்டால் ஒதப்பை மற்றும் அதன் சுற்றியுள்ள சிதஞ்சேரி, மயிலாப்பூர், தேவேந்திரவாக்கம் பெரிஞ்சேரி, போந்தவாக்கம், அனந்தேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது.

அவர்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருவள்ளூர் செல்ல சீதஞ்சேரி காப்புக்காடு, வெங்கல், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் சூழ்நிலை நிலவி வருகிறது.

எனவே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றியுள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து ஒதப்பையிலிருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வகையில் ரூ.12.10 கோடி மதிப்பில் ஒரு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. அதே போல் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வரும் வகையில் சுமார் ரூ.13.89 கோடி மதிப்பில் மற்றொரு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. இந்த 2 உயர் மட்ட பாலப்பணிகள் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளன. எனவே வருகிற பருவமழைக்கு முன்னர் மேம்பால பணியை முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்