< Back
மாநில செய்திகள்
மனுநீதிசோழன் கல்தேருக்கான திருப்பணி மேற்கொள்ளப்படுமா?
திருவாரூர்
மாநில செய்திகள்

மனுநீதிசோழன் கல்தேருக்கான திருப்பணி மேற்கொள்ளப்படுமா?

தினத்தந்தி
|
17 Jun 2023 6:45 PM GMT

திருவாரூர் தியாகராஜர்கோவிலில் உள்ள மனுநீதிசோழன் கல்தேருக்கான திருப்பணி மேற்கொள்ளப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்தேர்

திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற திருவீதியில் வரலாற்று சிறப்புமிக்க கல்தேர் உள்ளது. இந்த தேர் மனுநீதிச்சோழனின் வரலாற்றை கூறும் சிற்பங்கள் அடங்கிய ஒரு கலைக்கூடமாக திகழ்கிறது. தேர் நான்கு சக்கரங்களும், குதிரைகளும் பூட்டிய நிலையில் மண்டபத்தின் உபபீடம் அழகிய சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது குதிரைகள் சுதை சிற்பங்களாக உள்ளன. மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் (ப்ரியவிருத்தன்), தேர் சக்கரத்தில் சிக்கிக்கிடப்பது போல் கல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கல்தேருக்கு சற்று அருகில் ஒரு சிறிய மண்டபம் போன்று நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு அதற்குள் ஒரு மணியும் கீழே சோகமான நிலையில் பசுவும், இறந்த கன்றும் சிற்பமாக காட்சியளிக்கின்றன.

பொலிவிழந்த நிலையில் வர்ணங்கள்

அக்கன்றின் வயிற்றில் தேர்ச்சக்கரம் ஏறிய சுவடு உள்ளது போன்று தத்ரூபமாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் மட்டுமின்றி கல்தேரின் நடுவில் உள்ள மண்டபத்தின் உள்புறத்தில் மூன்று துண்டு கற்களில் இறைவன் காட்சிக்கொடுப்பதும், மனுநீதிச்சோழன், மகன் வீதிவிடங்கன் நிற்பது போன்றும், கன்று தாய்ப்பசுவுடன் நிற்பது போன்றும் அழகிய சிற்பங்கள் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன. கல்தேர் மண்டபத்தில் உள்ள சிலையில் பூசப்பட்ட வர்ணங்களும் பொலிவிழந்த நிலையில் உள்ளது. கல்தேர் இருக்கும் வளாகம் முழுவதும் புற்கள் மண்டிக்கிடக்கிறது.

திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்த போது 28 மீட்டர் சுற்றுச்சுவர் அமைத்தல், கருங்கல் தளம் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார். ஆனால் அதற்கான பணிகள் தொடங்கியவாறு தெரியவில்லை. சுற்றுச்சுவர் மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. கல்தேர் வளாகம் எப்போதும் பூட்டப்பட்டு இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கல்தேரை காண வந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து விரைவில் கல்தேருக்கான திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்