< Back
மாநில செய்திகள்
அத்திப்பட்டு புதுநகர் வாசிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொதுமக்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அத்திப்பட்டு புதுநகர் வாசிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுமா? எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பொதுமக்கள்

தினத்தந்தி
|
7 Oct 2022 6:12 PM IST

அரசு சார்பில் அத்திப்பட்டு புதுநகரில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

வடசென்னை அனல்மின் நிலையம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வங்க கடலோரத்தில் உள்ள எண்ணூர் 44, எண்ணூர் முகத்துவாரம் உட்பட பல குக்கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். இந்த கிராமங்களில் தமிழக அரசு சார்பில் கடந்த 1984-ம் ஆண்டு கடலோரப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிலங்களை கைப்பற்றி வடசென்னை அனல்மின் நிலையம் அமைக்க முடிவு செய்தனர். இந்த நிலங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அனல் மின்நிலையம் அமைக்க 1107.57 ஏக்கரும், சாம்பல் குளம் அமைக்க 1125.69 ஏக்கரும், அனல்மின் நிலைய தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க 247.06 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தினர்.

வீட்டுமனைப்பட்டா அவசியம்

பின்னர் வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட், 2-வது யூனிட், 3-வது யூனிட் ஆகியவை உருவாக்கும் வகையில் ரூ.1,547 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு முதல் யூனிட்டில் 630 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. இந்த நிலையில் வட சென்னை அனல்மின் நிலையம் அமைக்க நிலங்களையும் அளித்து கிராமங்களையும் விட்டு மக்கள் வெளியேறியதால், அவர்களுக்கு அத்திப்பட்டு புதுநகரில் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு கடந்த 35 ஆண்டுகளாக வீடுகள் கட்டி பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு கடன் வழங்குவது மற்றும் இதர சேவைகளை பெற வீட்டுமனைப்பட்டா அவசியம் தேவைப்படுகிறது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இந்த நிலையில், அத்திப்பட்டு புதுநகரில் கடந்த 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 546 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக மனு அளித்து காத்து கிடக்கின்றனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் ஆகியோர் அத்திப்பட்டு புதுநகர் வாழ் பொதுமக்கள் அடிப்படை தேவையான வீட்டுமனை வழங்க பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மக்களின் நீண்டநாள் வாழ்வாதார பிரச்சினையான வீட்டுமனைப்பட்டாவை வழங்கிட வேண்டுமென அத்திப்பட்டு ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்