< Back
மாநில செய்திகள்
ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
25 Aug 2022 4:16 PM GMT

ஆனைமலை-பொள்ளாச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனைமலை

ஆனைமலை-பொள்ளாச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில்வே கேட்

ஆனைமலை-பொள்ளாச்சி சாலையில் சுப்பையகவுண்டன்புதூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் தினமும் காலை 8.40 மணிக்கு பாலக்காடு செல்லும் ரெயில், மாலை 4.35 மணிக்கு பாலக்காட்டில் இருந்து வரும் ரெயில் சென்று வருகிறது.

இதற்கிடையில் அந்த ரெயில்வே கேட் வழியாக தண்டவாளத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக ஆழியாறு, பரம்பிக்குளம், வால்பாறை, டாப்சிலிப், மாசாணி அம்மன் கோவில் உள்பட முக்கிய இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் அதிகம். இது தவிர பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

கடும் அவதி

இந்த நிலையில் சுப்பையகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ரெயில்வே கேட், காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த வழியாக ரெயில் செல்லும்போது மூடப்படுகிறது. அப்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி பிற நிறுவனங்களில் வேலை நேரம் தொடங்கும் நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவதால், அங்கு செல்ல காத்திருக்கும் பலரும் கடும் அவதிப்படுகிறார்கள்.

மேம்பாலம்

இதுகுறித்து ஆனைமலை பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியை தாலுகாவாக அறிவித்து 3 ஆண்டுகள் ஆகியும், போதிய மருத்துவ வசதி இல்லை. இதனால் அவசர தேவைக்கு கூட பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் சில நேரங்களில் சுப்பையகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடி கிடப்பதால், ஆம்புலன்ஸ் கூட காத்திருக்க வேண்டி உள்ளது.

மேலும் காலை மற்றும் மாலையில் முக்கிய நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படுவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் காலதாமதத்தை சந்திக்கின்றனர். எனவே அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்