< Back
மாநில செய்திகள்
ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா? மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு
மாநில செய்திகள்

ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா? மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
16 Nov 2022 2:39 PM IST

ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது.

இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது

இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.

விமானத்தில் தொடரும் சலுகை

பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-


சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த எஸ்.டி.செல்வம் (வயது 63):- விமானத்திலேயே மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரெயில்வே நிர்வாகம் வழங்கி வந்த சலுகையை கொரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்திவைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

வயதான பயணிகளுக்கு அளிக்கப்படும் சலுகையை ரெயில்வே வாரியம் சுமையாக கருதக்கூடாது. எனவே பறிக்கப்பட்ட சலுகையை மீண்டும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய மந்திரியின் நிலைப்பாடு



கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்த த.ராமசாமி (75):- எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். எனது மகள்களை பார்ப்பதற்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை ரெயிலில் சென்று வருவேன். மூத்த பயணிகளுக்கான டிக்கெட் சலுகை நிறுத்திய பின்னர் 5 மாதங்களுக்கு ஒரு முறை சென்று வருகிறேன்.

மூத்த பயணிகளுக்கான சலுகை இருந்தபோது ரூ.237 கட்டணத்தில் படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்து வந்தேன். தற்போது ரூ.395 கட்டணத்தில் சென்று வருகிறேன். ரத்து செய்யப்பட்ட சலுகை மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.




எழும்பூரை சேர்ந்த சக்தி ஜெயகர் (78):- நான் ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை. எனக்கு மாதந்தோறும் பென்ஷன் கிடைக்கிறது. எனவே முதியோர் பயண சலுகை கட்டணம் ரத்து என்னை பொறுத்தவரையில் பாதிப்பு இல்லை. ஆனால் ஏழை-எளிய குடும்பங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு நிச்சயம் பெரிய சுமையாக உள்ளது.

ரெயில்வே மந்திரி இந்த சலுகையை மீண்டும் வழங்குவதற்கு திட்டமில்லை... திட்டமில்லை... என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். பாமர பயணிகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

வேதனைக்குரியது



சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த என்.பூலோக சரஸ்வதி (74):- கட்டணம் குறைவு என்பதால் முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டிகளில் என்னை போன்ற முதியோர்களால் பயணம் செய்ய முடியாது. ஏனென்றால் அந்த பெட்டிகளில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் இருக்கும்.

எனவே கட்டணம் அதிகம் இருந்தாலும் முன்பதிவு பெட்டியில் பயணிக்கிறோம். வயதான காலத்தில் ஆன்மிக பயணம்தான் சென்று வருகிறோம். ஆனால் பறிக்கப்பட்ட கட்டண சலுகையை இன்னும் வழங்காமல் இருப்பது முதியோர்களை ரெயில்வே நிர்வாகமும் சிரமமாக கருதுகிறதோ? என்று எண்ணத்தோன்றுகிறது.



மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பி.மாணிக்கம் (64):- ஒரு சலுகை கிடைப்பதற்கு காத்திருப்பதே வேதனையான விஷயம் ஆகும். அதுவும் கொடுத்த சலுகையை பறிப்பது என்பது மிகவும் வேதனைக்குரியது.

எனவே ரெயில்வே நிர்வாகம் இழப்பீட்டை சமாளிக்க கூடுதல் ரெயில்களை இயக்குவது, சரக்குகளை அதிகம் கையாள்வது போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, பறிக்கப்பட்ட முதியோர் டிக்கெட் கட்டண சலுகையை மீண்டும் அளிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பச்சைக் கொடி காட்டுமா?

தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையே தாராள மனதுடன் பெண்களுக்கு இலவச பயண சலுகை, முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் ரெயில்வே துறை ஏற்கனவே வழங்கி வந்த சலுகையை பறித்து நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.

எனவே ரெயில்வே நிர்வாகம் சிவப்புக் கொடி காட்டி நிறுத்திவைத்திருக்கும் கட்டணச் சலுகைக்கு விரைவில் பச்சைக் கொடி காட்ட வேண்டும் என்பதே மூத்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

மேலும் செய்திகள்