சமூக வாழ்வு நல்லிணக்கத்துக்கு எதிராக பிரதமர் பேசுவதா? முத்தரசன் கண்டனம்
|சமூக வாழ்வு நல்லிணக்கத்துக்கு எதிராக பிரதமர் பேசுவதா? முத்தரசன் கண்டனம்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியபிரதேசத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, "சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக'' குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரின் பேச்சு சனாதன சம்பிரதாய நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு மதவெறியூட்டும், அவரது மலிவான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அண்மையில் ஜி-20 உச்சிமாநாட்டுக்கு "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்'' என்ற கருப்பொருள் வழங்கியதாக பெருமைப்பட்ட பிரதமர் மோடி, இந்தியாவில் மக்கள் அனைவரும் சமமான உரிமைகளுடன் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து வருவதாக பேசினார். ஆனால் இங்கு சமூகத்தை பிளவுபடுத்தும் சனாதனத்தை பாதுகாக்க சூளுரைக்கிறார் நாட்டின் பிரதமர் இரட்டை நாக்கில் பேசுவதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வெளிப்படுத்தும்.
சமூக வாழ்வில் நல்லிணக்கம் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டிய பிரதமர் மோடி, அதற்கு எதிராகப் பேசி வருவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.