< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா?

தினத்தந்தி
|
19 Dec 2022 1:08 AM IST

அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா என்பது குறித்து வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம் என்பது நாட்டில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பொறுத்து, நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.

பண வீக்கம்

பண வீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

அச்சம் தேவையில்லை

இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார்.

பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-

கட்டுப்படுத்த முடியாது

பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:-

இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது.

பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது.

பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும்.

அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.

கேள்விக்குறி

விருதுநகரை சோ்ந்த பொருளியல் நிபுணர் டாக்டர் வைரமுத்துவேல்:-

மத்திய நிதி மந்திரி ரிசர்வ் வங்கி 0.35 சதவீதம் வங்கி கடன்களுக்கான வட்டியை உயர்த்தி அறிவித்துள்ள நிலையில் பண வீக்கம் 5.08 சதவீதமாக குறைந்துள்ளதால் வரும் நாட்களிலும் பணவீக்கம் கட்டுப்படும், விலைவாசி விளைவாகி குறையும் என்றும் தெரிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது கேள்விக்குறியே. ரிசர்வ் வங்கி கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதால் அதன் தாக்கம் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தான் ஏற்படுமே தவிர சாமானிய மக்களுக்கு ஏற்பட போவதில்லை. மேலும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது.

ஆனால் அந்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி உடனடியாக எடுக்குமா என்பது கேள்விக்குறியே. எனினும் சாமானிய மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் விலைவாசி குறையும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. பண வீக்கம் கட்டுப்படாத நிலையில் அதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சியிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த 2 மாதங்களில் விலைவாசி உறுதியாக உயரவே வாய்ப்புள்ளது.

வங்கி கடன்

விருதுநகர் நோபிள் கல்லூரி பேராசிரியர் வேல்மணி:-

இந்தியாவை பொருத்தமட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக பணவீக்கம் 6.04 சதவீதமாக இருந்து வருகிறது. தற்போது ரிசர்வ் வங்கியின் வங்கி கடன் வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பணவீக்கம் கட்டுப்பட்டு உள்ளது என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. ரிசர்வ் வங்கி நடவடிக்கை சாமானிய மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.

எனவே சில்லரை வணிகப்பொருட்களின் பணவீக்கம் கட்டுப்படும் என்பது ஏற்புடையது அல்ல. விலைவாசி உயர்வதற்கு தான் வாய்ப்பு உள்ளது.

பொருளாதார வளர்ச்சி

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க செயலாளர் இதயம் முத்து:-

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் 3-வது இடத்தினை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சீரான பொருளாதார வளர்ச்சியே காரணமாகும். அதற்கான அரசியல் சூழலும் தேசிய அளவில் நாட்டில் நிலவுகிறது. ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் பண வீக்கம் பொருளாதார வளர்ச்சி என பேசப்பட்டாலும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது.

பொருளாதாரம் மேம்பட நடவடிக்கைகள் ஓரளவு எடுக்கப்பட்டாலும் நாட்டின் இளைஞர் சக்தி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தயாராக உள்ள நிலையில் நிச்சயம் பொருளாதாரம் மேம்படும். பண வீக்கம் கட்டுப்படும், விலைவாசி குறையும்.

அருப்புக்கோட்டை இல்லத்தரசி லட்சுமி:-

தினசரி கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடத்துகிறோம். தற்போது மளிகை பொருட்கள், மருந்து, மாத்திரைகள் விலை முன்பு இருந்ததை விட தற்போது அதிகமாக உள்ளது. கேஸ் விலையும் உயர்ந்துள்ளது. கடைக்காரரிடம் கேட்டால் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது என கூறுகிறார்கள். எதனால் விலை உயர்ந்தது என தெரியவில்லை. விலைவாசி உயர்வால் கடன் வாங்கித்தான் குடும்பத்தை நடத்தும் சூழல் உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்