மயிலாடுதுறை
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
|திருவெண்காடு, சின்னப்பெருந்தோட்டம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு, சின்னப்பெருந்தோட்டம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குண்டும் குழியுமான சாலை
திருவெண்காடு ஊராட்சியில் சின்னப்பெருந்தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை திருவெண்காடுடன் இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள இந்த சாலையை பயன்படுத்தி தான் பெரும் தோட்டம், அகர பெருந்தோட்டம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திருவெண்காடு பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
வாகன ஓட்டிகள் காயம்
சாலையில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளங்களுடன் இருப்பதுடன், மழைக்காலங்களில் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நின்று குளம் போல் காட்சியளிக்கிறது. சாலையில் கற்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.
இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மேற்கண்ட கிராமங்களில் சுமார் 1500 ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருவகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் திருவெண்காடு செல்வதற்கு 2 கி.மீ தூரம் உள்ள மங்கை மடம், நெய்தவாசல் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.