நாகப்பட்டினம்
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
|குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
தென்னம்புலம் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் ஊராட்சியில் கருப்பன்காடு உள்ளது. இங்கு வேதையா அரசு உதவி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகே செல்லும் சாலையில் தினமும் தென்னம்புலம், செண்பகராயநல்லூர், செட்டிப்புலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பள்ளத்தில் மழைநீர் ேதங்கி நிற்கிறது.
சீரமைக்க வேண்டும்
இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னம்புலம் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.