நீலகிரி
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
|பொன்னானி-மாங்காவயல் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பந்தலூர்,
பொன்னானி-மாங்காவயல் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சாலையில் குழிகள்
பந்தலூர் தாலுகா பொன்னானி அருகே மாங்காவயல் உள்பட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அவசர தேவைகளுக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் பொருட்கள் வாங்கவும் பொன்னானி வந்து தான் செல்ல வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு செல்ல மாங்காவயல் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மாங்காவயல் பகுதியில் பொன்னானியில் இருந்து அரசு உண்டு உறைவிடப்பள்ளி வழியாக சாலை செல்கிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் நிரம்பி குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைகளுக்கு செல்லும் வாகனங்கள், ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகின்றன.
சீரமைக்க வேண்டும்
இதனால் நோயாளிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பொன்னானி-மாங்காவயல் இடைேய சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவசரத்துக்கு செல்ல வாகனங்கள் வருவது இல்லை. இதன் காரணமாக நோயாளிகள், கர்ப்பிணிகளை உரிய நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சாலையில் நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.