நீலகிரி
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
|பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பழுதடைந்த சாலை
பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கொளப்பள்ளி, டேன்டீ ரேஞ்ச் எண்.2, காவயல் வழியாக புஞ்சகொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் மட்டுமின்றி, தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் கடைக்கு வந்து செல்லவும் மழவன் சேரம்பாடி வழியாக கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் மழவன் சேரம்பாடி முதல் புஞ்சகொல்லி வரை சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழிகளில் தண்ணீர் தேங்கி, குளம்போல் காணப்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், பிற வாகனங்கள் பழுதடைந்த சாலையின் நடுவே நின்று விடுகிறது.
சீரமைக்க வேண்டும்
இந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மழவன் சேரம்பாடியில் இருந்து புஞ்சகொல்லி வரை செல்லும் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது.
சாலை பழுதடைந்து உள்ளதால், யானைகள் துரத்தினால் கூட ஓட முடியாத அவல நிலை இருக்கிறது. குழிகளில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், மேலும் குழிகள் பெரிதாகி வருகிறது. எனவே, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.