பெரம்பலூர்
பெரம்பலூர் வாரச்சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா?
|பெரம்பலூர் வாரச்சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வாரச்சந்தை
பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மதனகோபால சுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாரச்சந்தை மாலை முதல் இரவு வரை செயல்பட்டு வந்தது. இந்த வாரச்சந்தை ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த சந்தையில் காய்கறிகள், கனிகள், கீரைகள், உப்பு கருவாடு, பூண்டு மற்றும் மளிகை பொருட்கள், நறுமண பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் வீட்டு சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்ல வசதியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் வாரச்சந்தை இருந்த இடத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் வகையில் பன்மாடி கட்டிடம் கட்டப்பட்டதை தொடர்ந்து வாரச்சந்தை பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை அருகே மேற்கண்ட கோவில்களுக்கு உரிய சொந்தமான இடத்தில் இயங்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அங்கேயும் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது.
கொரோனா காலத்தில் மூடப்பட்டது
மாற்றப்பட்ட வாரச்சந்தையில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தேவையான அனைத்து வகையான பொருட்களையும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று அதிகமாக பரவுவதற்கு காரணமாக இருப்பதாக கூறி வாரச்சந்தை, உழவர் சந்தை, பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் ஆகியவை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி நிர்வாகம் மூலம் காலவரையறை இன்றி மூடப்பட்டன.
பின்னர் சில மாதங்கள் கழித்து உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது. ஆனால் மூடப்பட்ட வாரச்சந்தை இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் நகர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒரே இடத்தில் தங்களது வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கனிகள் மற்றும் பல வகை கீரைகள் ஆகியவற்றை மலிவான விலையில் வாங்க முடியவில்லை. அவர்கள் வேறு இடங்களுக்கு சென்று அவற்றை வாங்க வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடந்த 3 ஆண்டுகளாகவே சிரமப்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் வாரச்சந்தையில் கடை போட்டிருந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறிய கருத்துகள் வருமாறு:-
அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்
பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை செங்கோல் நகரை சேர்ந்த சுபாலட்சுமி:- சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாரத்தில் ஒரே நாள் ஒரே இடமான வாரச்சந்தைக்கு சென்று வாங்கி வந்தோம். கொரோனா காலத்தில் மூடப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் தற்போது ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று வாங்கி வருவது சிரமமாக உள்ளது. எனவே வாரச்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக விலைக்கு விற்பனை
பெரம்பலூர் வெங்கடேசபுரம் விரிவாக்கம் சுந்தர் நகரை சேர்ந்த செந்தில் வேலன்:- வாரச்சந்தை திறக்காததால் செவ்வாய்க்கிழமை தோறும் பழைய பஸ் நிலையம் பகுதி, வடக்கு மாதவி சாலை, வாரச்சந்தைக்கு முன்புறம் உள்ள சாலை, பாலக்கரை ஆகிய பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அமைத்து காய்கறிகள், கனிகள், கீரைகள், உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பெரும் அவதியடைந்து வருகிறோம். மேலும் இந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாரச்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிரமத்துக்கு ஆளாகின்றனர்
பெரம்பலூர்-எளம்பலூர் சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த ஜெயராமன்:- வாரச்சந்தையால் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வந்தனர். கொரோனாவிற்கு பிறகு மூடப்பட்ட வாரச்சந்தை மீண்டும் திறக்கப்படாததால் பெரம்பலூர் நகர பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வாரச்சந்தை மீண்டும் திறந்தால் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்
வாரச்சந்தையில் கடைகள் போட்டிருந்த விவசாயிகள், வியாபாரிகள்:- பெரம்பலூர் வாரச்சந்தையில் எங்களுக்கு அதிகளவு வியாபாரம் நடைபெற்று வந்தது. போதிய வருமானமும் கிடைத்தது. தற்போது வாரச்சந்தை நடைபெறாததால் நாங்கள் அருகே உள்ள ஊர்களில் நடைபெறும் வாரச்சந்தைக்கு கடை போட செல்ல வேண்டியிருக்கிறது. பெரம்பலூரில் வாரச்சந்தை நடைபெறாததால் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர வியாபாரிகள், வாகனங்களில் வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் அதிக விலைக்கு காய்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
வாரச்சந்தை நடைபெற்ற இடம் தற்போது பராமரிப்பின்றி செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. திறந்த வெளியாக சிறுநீர், இயற்கை உபாதை கழிக்கும் இடமாக மாறியுள்ளது. மேலும் அந்த இடத்தில் நகராட்சி மூலம் சேகரிக்கப்பட்டு கொட்டப்படும் குப்பைகள் மலை போல் குவிந்து வருகிறது. மேலும் உழவர் சந்தை கழிவுகள் கொட்டப்படுகிறது. மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது. வாரச்சந்தை நடைபெற்ற இடத்தை தூய்மைப்படுத்தி, சுற்றி கம்பி வேலி அமைத்து, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கு கடை போடுவதற்கு ஏதுவாக வசதிகளும் செய்து கொடுத்து வாரச்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.