< Back
மாநில செய்திகள்
பட்டுக்கோட்டை-தஞ்சை ரெயில் பாதை திட்டம் நிறைவேறுமா?
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பட்டுக்கோட்டை-தஞ்சை ரெயில் பாதை திட்டம் நிறைவேறுமா?

தினத்தந்தி
|
23 Jan 2023 12:41 AM IST

பட்டுக்கோட்டை-தஞ்சை ரெயில் பாதை திட்டம் நிறைவேறுமா?

91 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பட்டுக்கோட்டை-தஞ்சை ரெயில் பாதை

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் புனித தலங்கள் எங்கெங்கு உள்ளதோ அவற்றை இணைக்கும் வகையில் ரெயில் பாதைகளை அமைத்தனர்.

அதன் அடிப்படையில் தான் பட்டுக்கோட்டை-தஞ்சை ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு 1932-ம் ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. சர்வே செய்து எல்லை கற்கள் நடப்பட்டன.

பின்னர் அந்த திட்டம் 1946-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டு திட்டம் லாபம் தருமா? என்பதன் அடிப்படையில் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் 2000-ம் ஆண்டில் ரீ சர்வே செய்து ரூ.101 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே முடிவு செய்து அறிவித்தது. ஆனால் மீண்டும் இத்திட்டத்தில் லாபம் இருக்காது என்று கிடப்பில் போடப்பட்டது. பின்னர் டி.ஆர். பாலு எம்.பி. முயற்சியால் 19.3.2012-ம் ஆண்டு, 2013-14-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பட்டுக்கோட்டை-தஞ்சை 47.2 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதை ரூ.290 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ரெயில்வே துறையினால் அனுமதிக்கப்பட்டு நில அளவையும் செய்யப்பட்டு பாப்பாநாடு, ஒரத்தநாடு, உளூர் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சரியான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

முன்னேற்றம் அடையும்

இந்த பட்டுக்கோட்டை- தஞ்சை இணைப்பு ரெயில் பாதை அமைக்கப்பட்டால் தஞ்சை-அரியலூர் ரெயில் பாதையும் அமைக்கப்படும் என்றும், இதனால் வட மாவட்டங்கள், வடமாநிலங்கள் இணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் முடக்கப்பட்டு 91 ஆண்டுகளாகியும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது.

இதுபோன்று தான் பட்டுக்கோட்டை- மன்னார்குடி ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக 2012-ம் ஆண்டு சர்வே முடிந்து வழியில் உள்ள ஆறுகளில் பாலங்கள் கட்டப்பட்டு திட்டம் பாதியோடு நிற்கிறது.

நாட்டில் முக்கியமான நகரங்களை இணைக்கக்கூடிய பட்டுகோட்டை- தஞ்சை, பட்டுக்கோட்டை- மன்னார்குடி ரெயில் பாதை திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்த பகுதி விவசாயம் மட்டுமல்ல தொழில் வளம் நிறைந்த பகுதியாக முன்னேற்றம் அடையும் என்பது மிகையல்ல.

ஒதுக்கீடு செய்ய வேண்டும்

எனவே தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சை- பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி, பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு மத்திய அரசு போதுமான அளவு நிதியினை இந்த ஆண்டிலாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

எனவே 91 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை- தஞ்சை ரெயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்