< Back
மாநில செய்திகள்
அபராத தொகையை உயர்த்தினால் மட்டும் விபத்துகள் குறைந்து விடுமா?
கடலூர்
மாநில செய்திகள்

அபராத தொகையை உயர்த்தினால் மட்டும் விபத்துகள் குறைந்து விடுமா?

தினத்தந்தி
|
23 Oct 2022 12:15 AM IST

அபராத தொகையை உயர்த்தினால் மட்டும் விபத்துகள் குறைந்து விடுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு நிகராக, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குடிசைகளில் வாழும் மக்கள் கூட தற்போது இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். மோட்டார் வாகனங்களின் பெருக்கமே, சாலை விபத்துகள் நிகழ்வதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். சாலை விபத்துகள் மனிதனால் ஏற்படுத்தக்கூடிய சோகமான நிகழ்வாக இருப்பதுடன், அவை நொடிப்பொழுதில் ஏற்படுகிறது.

விழிப்புணர்வு

அதிலும் சாலைகளில் உண்டாகும் பெரும்பாலான விபத்துக்களுக்கான முக்கிய காரணமாக சாலை விதிகளை முறையாக பின்பற்றாமையே உள்ளது. இதில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டும் ஆபத்தை சந்திக்க நேரிடாது. கூட இருப்பவர்கள் எதிரில் வருபவர்கள் எனப் பலரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். வாகனங்களும் சேதம் அடைகின்றன. தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளில், ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்துவதற்கு முயற்சிக்கும் போதும், மதுபோதையில் வாகனம் ஓட்டும் போது, செல்போனில் பேசிக்கொண்டு செல்லும்போதுதான் நடக்கின்றன.

இதனால் விபத்துகள் ஏற்படா வண்ணம் இருக்க போக்குவரத்து காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் பணி செய்கின்றனர். பல இடங்களில் வண்ண விளக்குகளால் சாலை போக்குவரத்து விதிமுறைகள் நெறிப்படுத்தப்படுகின்றது. சிவப்பு, மஞ்சள், பச்சை என விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர சாலை விபத்துகளை தவிர்க்க தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை அதிகரித்தால் மட்டுமே விபத்துகளை குறைக்க முடியும் என மத்திய அரசு முடிவு செய்து மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கடலூர் மாவட்ட மக்கள் தங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

வரவேற்பு

மேலூர் சபரிநாதன் கூறுகையில், உலகிலுள்ள அனைத்து வாகனங்களில் இந்தியாவில் உள்ளது ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால் உலக அளவில் உள்ள விபத்துகளில் இந்தியாவில் 15 சதவீதம் நடக்கின்றன. இதில் தமிழகம் முதலிடம் பெறுகின்றது. காரணம், போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காமையேயாகும். எனவே போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது நம் ஒவ்வொருவரது தலையாய கடமையாகும். அதனால் தற்போது அபராத தொகையை உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்போம், விபத்துக்களை தவிர்ப்போம் என்றார்.

விபத்துகள் தவிர்ப்பு

தொழுதூர் உதயக்குமார்:- கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது போன்ற காரணங்களால் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பேர் பலி ஆகிறார்கள். மேலும் ஏராளமான பேர் கை, கால்களை இழந்து ஊனம் அடைகிறார்கள். அதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கான அபராத தொகையை பல மடங்கு உயர்த்தியுள்ளதன் மூலம் வாகன ஓட்டிகள் ஒருவித எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டிச் செல்வார்கள். அதனால் விபத்துகளும் பெரும் அளவில் தவிர்க்கப்படும் என்றார்.

நடவடிக்கை எடுக்கலாம்

பு.முட்லூர் காதர் உசேன்:- தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது விபத்துகளை கட்டுப்படுத்த உதவும். அண்மைக்காலமாக அதிக அளவில் விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. விபத்துக்கு முக்கிய காரணம் மிக வேகமாக வாகனங்களை இயக்குவதும், போக்குவரத்து விதிகளை மீறுவதுமாகும். எனவே வேகக்கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், கார்களில் செல்பவர்கள் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்றும், அதை மீறுபவர்களிடம் அபராத தொகை வசூலிக்கலாம். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் முதல் முறை விதிகளை மீறுபவர்களை எச்சரிக்கை செய்தும், அடுத்த முறை அதே தவறை அவர்கள் செய்தால் அபராத தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு கஜானா

விருத்தாசலம் வக்கீல் ஜெயபிரகாஷ்:- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், அவரது பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தாலோ ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக, ரூ.500 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டை போலீசாரே வாங்கி கொடுத்து விடலாம். அரசு கஜானாவை நிரப்பும் வகையில் தான் இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மக்களிடம் அன்றாட செலவு போக மீதம் ஆயிரம் ரூபாய் இருந்தால் ஏன் ஹெல்மெட் வாங்காமல் இருக்க போகிறார்கள். அந்த பணமே இல்லாமல் தான் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர். அவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தால், கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

திரும்ப பெற வேண்டும்

கடலூர் ஸ்ரீராம்:- தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை திடீரென உயர்த்தப்பட்டது மக்களிடையே குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்களிடையே மிகப்பெரிய அவப்பெயராக அமையும். மது குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்துவது, அதிவேகம், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்வது போன்ற வகைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கலாம். ஆனால் ஹெல்மெட், ஓட்டுனர் உரிமத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டு போனாலும் கடுமையான அபராதம் என்பதை எல்லாம் ஏற்கத்தக்கதல்ல. அதனால் உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும்.

மேலும் செய்திகள்