< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்

ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

தினத்தந்தி
|
23 April 2023 12:46 AM IST

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? என உடையார்பாளையம் மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதிய பஸ் நிலையம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கழுமங்கலம், கச்சிப்பெருமாள், இடையார், துவரங்குறிச்சி, பருக்கல், துலாரங்குறிச்சி, சூரியமணல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி மக்களின் நலன்கருதி திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கடந்த 2008-2009-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது.

இந்த பஸ் நிலையம் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி திறக்கப்பட்டு 1 மாதம் மட்டுமே செயல்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு புதிய பஸ் நிலையம் பயன்படுத்தப்படாமல் மீண்டும் பழைய பஸ் நிலையமே செயல்பட்டு வருகிறது.

மதுப்பிரியர்களுக்கு புகலிடம்

உடையார்பாளையம் பேரூராட்சி என்பதால் அரசு அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் ஜெயங்கொண்டத்தில் இருந்து, அரியலூர், திருச்சி செல்லும் பஸ்கள் உடையார்பாளையம் நகருக்குள் செல்லும் போது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சரியான நேரத்தில் தாங்கள் செல்லும் இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஒரு சில பெட்டிக்கடைகள் மட்டுமே செயல்படுகிறது. தற்போது இந்த கட்டிடம் மதுப்பிரியர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக மாறியுள்ளது.

இக்கட்டிடத்தில் மது பாட்டில்களையும், தண்ணீர் பாட்டில்களையும் அங்கேயே விட்டு செல்வதோடு மது போதையில் சாதி வெறியை தூண்டும் அளவிற்கு ஆபாச வார்த்தைகளையும் கட்டிட சுவரில் எழுதி வைத்துள்ளார்கள். மேலும் வாரச்சந்தை தற்போது புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 12 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் புதிய பஸ்நிலையத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

போதிய இடவசதி இல்லை

உடையார்பாளையத்தை சேர்ந்த சங்கர்:- உடையார்பாளையம் கடைவீதி அருகே செயல்பட்டு வரும் பழைய பஸ் நிலையம் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லை. மேலும் இங்கு போதிய இடவசதி இல்லாததால் கடந்த 2008-2009-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் ரூ.80 லட்சம் செலவில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களுக்காக இந்த பஸ் நிலையம் தற்போது செயல்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த பஸ்நிலையத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். இதன் மூலம் மக்கள் பயன் அடைவதுடன், உடையார்பாளையம் பேரூராட்சியும் வளர்ச்சி அடையும்.

மக்களின் வரிப்பணம் வீண்

இடையார் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி:- உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களின் நலன் கருதி பல லட்சம் ரூபாய் செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. இங்கு பஸ்களை நிறுத்தவும், பயணிகளை ஏற்றி இறக்கி செல்லவும் போதிய வசதிகள் உள்ளன. ஆனால் எதற்காக இந்த பஸ்நிலையம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படாமல் உள்ளது என்பது தெரியவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு இந்த பஸ்நிலையத்தை மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும்

உடையார்பாளையத்தை சேர்ந்த மீசை நடராஜன்:- உடையார்பாளையம் பழைய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 பஸ்கள் வந்தால் பஸ்களை திருப்ப முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே புதிய பஸ்நிலையத்தில் பஸ்கள் இயக்கப்பட்டால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் அங்குள்ள கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் கடை நடத்துவார்கள். அதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பேரூராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். மேலும் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டால் சுற்றிலும் கடைகள் புதிதாக உருவாகும் இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், உடையார்பாளையம் பேரூராட்சி நகராட்சியாக மாறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

நடந்து செல்லும் அவலம்

மூர்த்தியான் தெருவை ேசர்ந்த காமராஜ்:- நாங்கள் புதிய பஸ்நிலையம் அருகே வசித்து வருகிறோம். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்வதாக இருந்தாலும், வெளியூர் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் போதும் இரவு நேரத்தில் எந்த பயமும் இல்லாமல் உடனே வீட்டுக்கு சென்று விடலாம். பழைய பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்து எங்கள் தெரு 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் போதும் பஸ்நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய பஸ் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் இல்லை

கச்சிப்பெருமாள் பகுதியை சேர்ந்த கருணாகரன்:- புதிய பஸ்நிலையத்தில் சுமார் 6 ஏக்கரில் இடவசதி உள்ளது. மேலும், இங்கிருந்து திருச்சி, மதுரை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்களை இயக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ்நிலையம் கடந்த 12 ஆண்டுகளாக செயல்படாததால் பஸ் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. குறிப்பாக கழிவறை வசதிகள், தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலையும் தற்போது ஆங்காங்கே பெயர்ந்து உள்ளது. எனவே தமிழக அரசு இந்த பஸ்நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்