பெரம்பலூர்
28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?
|கடந்த 28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும்
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா?
பெரம்பலூர், அக்.6-
கடந்த 28 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
தமிழகத்திலேயே சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் ஆகியவை சாகுபடியில் முதலிடம் பெற்று வரும் பெரம்பலூர் மாவட்டம் அடுத்தப்படியாக பால் உற்பத்தியிலும் சிறப்பிடம் பெற்று வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் டி.ஆர்.டி. 1094 நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதில், கூத்தனூர், ஈச்சங்காடு, நாட்டார்மங்கலம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த 485 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கிருந்து தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளையும் சுமார் 3 ஆயிரத்து 100 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு பால் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பப்படுகிறது.
வாடகை கட்டிடம்
இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் கடந்த 28 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில், நெருக்கடியான சூழலில் செயல்பட்டு வருகிறது. மாதம் வாடகை கொடுத்து தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் நாட்டார்மங்கலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக 2016-ம் ஆண்டு ரூ.10.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டிடம் கட்டுவதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் அந்த நிதி திரும்பி சென்று விட்டது. எனவே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாட்டார்மங்கலத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.