நீலகிரி
வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
|கூடலூரில் நடைபாதை வியாபாரிகளுக்காக பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வணிக வளாகம் செயல்படாமல் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வருமா? என நடைபாதை வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் நடைபாதை வியாபாரிகளுக்காக பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வணிக வளாகம் செயல்படாமல் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வருமா? என நடைபாதை வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நடைபாதையில் இடையூறு
கூடலூர் நகரில் உள்ள நடைபாதைகள் ஓரத்தில் சிறு வியாபாரிகள் பல்வேறு கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது எனவும், சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
இதனால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு உழவர் சந்தை வளாகத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அங்கு எதிர்பார்த்தபடி போதிய விற்பனை இல்லாததால் மீண்டும் நடைபாதைகளில் கடைகள் தோன்றியது. இதையடுத்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளின் மேற்புறம் நடைபாதை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
வணிக வளாகம்
இதைத்தொடர்ந்து நகராட்சி கடைகளுக்கு மேற்புறம் திறந்தவெளியில் பல லட்சம் செலவில் இரும்பு கூடாரம் அமைக்கப்பட்டு, வணிக வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், பணி முடிந்தும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக வணிக வளாகம் தெரு நாய்கள் இருப்பிடமாக மாறி விட்டது.
பழைய பொருட்களை வைக்கும் மையமாகவும் உள்ளது. இதேபோல் மாலை நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு அமைக்கப்பட்ட வணிக வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.