திருவாரூர்
இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
|கோட்டூர் அருகே அக்கரைக்கோட்டகம்- கீழப்புத்தூர் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பாா்த்து உள்ளனர்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே அக்கரைக்கோட்டகம்- கீழப்புத்தூர் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பாா்த்து உள்ளனர்.
சாளுவனாற்று தென்கரை சாலை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அக்கரைக்கோட்டகம் பாலத்தில் இருந்து களப்பால் ஊராட்சி கீழப் புத்தூர் பாலம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சாளுவனாற்று தென்கரையில் கப்பி சாலை அமைந்துள்ளது.இந்த சாலை வழியாக பைங்காட்டூர், வாட்டார், நல்லூர், ஒரத்தூர், வேதபுரம் வெங்கத்தான்குடி, அக்கரைக்கோட்டகம் ஆகியஊராட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு சென்று வருகிறார்கள்.
கருவேல மரங்கள்
இந்தசாலையில் கப்பிகள் பெயர்ந்து சாலை குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து கோட்டூர் ஒன்றியக்குழுஉறுப்பினர் சாந்தி பாலசுந்தரம் கூறியதாவது:-அக்கரைக்கோட்டகம் சாளுவனாற்று பாலத்தில் இருந்துசாளுவனாற்று தென்கரை வழியாக களப்பால் ஊராட்சி கீழப்புத்தூர் பாலம் (மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி இணைப்பு சாலை) வரை உள்ள சாலை கஜா புயல் மற்றும் கன மழை காரணமாக ஜல்லிகள் பெயர்ந்து இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம், சட்டமன்றத் தொகுதிஅலுவலகம், மருத்துவமனைகள், கல்லூரி மற்றும் இதர வணிக வளாகங்களுக்கு செல்ல 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
தார்சாலை
மேலும் பட்டமடையான், கீழப்புத்தூர், திருக்களார் கோட்டகம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் போக்குவரத்துக்கு இந்த சாலை மிகவும் அவசியமானதாக உள்ளது.எனவே இந்தசாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரக்கூடிய அளவில் தார் சாலையாக சீரமைக்க வேண்டும்.
கரைகளில் உடைப்பு
இதன்மூலம் சாளுவனாற்று தென்கரைபலப்பட்டு மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் பல முறை பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை நேரில் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.