மயிலாடுதுறை
குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
|குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
சீர்காழி:
சீர்காழி பகுதியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குளங்கள்
சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சாலையோரம் உள்ள அரியபிள்ளை குளம், தென்பாதி திருவேங்கடம் பிள்ளை பூங்கா குளம், பிடாரி வடக்குவீதி தாமரைகுளம், கச்சேரி சாலையில் உள்ள தீர்த்தவாரி குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீர்காழி நகராட்சி மற்றும் கோவிலுக்கு சொந்தமான குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் சீர்காழி நகர் பகுதி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
ஆகாய தாமரைகள்
இந்த குளங்களில் ஆகாயத்தாமரை அதிகளவு வளர்ந்து குளமே ெதரியாத அளவுக்கு பச்சை போர்வை போர்த்தியது போல காட்சி அளிக்கிறது. இதனால் இந்த குளத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்த குளங்களில் ஆகாயத்தாமரை அதிகளவு படர்ந்து உள்ளதால் தண்ணீரின் அளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
எனவே, சீர்காழி நகர் பகுதியில் உள்ள குளங்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை சுத்தப்படுத்தவும், அதன் வரத்து வாரிகளை தூர்வாரவும், வரத்து வாரி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.