அரியலூர்
கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
|‘அனைத்து சாலைகளும் ரோமாபுரிக்கு இட்டுச்செல்கின்றன' என்ற சொல் வழக்கு உண்டு. அதுபோல கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் எல்லோருடைய பார்வையும் கர்நாடகாவை நோக்கியே இருந்தன.
காங்கிரஸ் கட்சி வெற்றி
கடந்த 10-ந் தேதி அங்கு வாக்குப்பதிவு நடந்தது. 13-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. கர்நாடகம் மிகவும் வித்தியாசமான முறையில் தேர்தல்களை சந்திக்கும் மாநிலமாகும். அங்கு ஒரு முறை பா.ஜனதா வெற்றி பெற்றால், அடுத்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்த தேர்தலில் அந்த வரலாற்றை முறியடித்தே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் சபதம் எடுத்து பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றினார்கள். காங்கிரசும் விட்டு வைக்கவில்லை. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர்.
முடிவில் காங்கிரஸ் 135 இடங்களும், பா.ஜனதா 66 இடங்களிலும் வெற்றி பெற்றன. 'எங்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் மக்களின் எண்ண ஓட்டம்.
வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 'இதுதான் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகளும்', 'இல்லை, இல்லை மாநில தேர்தல்களின் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்க வாய்ப்பே இல்லை' என்று பா.ஜனதா ஆதரவாளர்களும் உறுதியாக கூறுகிறார்கள். இந்தநிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று அரசியல் கலப்பில்லாத மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-
மக்கள் மனநிலை
மத்திய ஜவுளித்துறையின் ஓய்வுபெற்ற அரசு செயலாளரும், தமிழக அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்தவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம்:- கர்நாடக மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. மக்கள் நலன் கருதி கர்நாடக மாநிலத்தில் நல்ல ஆட்சியை அவர்கள் அளித்தால், 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற வெற்றியை அவர்கள் பெற முடியும். ஒரே ஆண்டில் மக்களின் மனநிலை மாற வாய்ப்பு இல்லை. காங்கிரசின் இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் இடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் மனநிலையைப் பொறுத்தும் இது இருக்கிறது.
சங்கநாதம் ஒலித்துள்ளது
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் கூடுதல் தலைமை செயலாளருமான இரா.கிறிஸ்துதாஸ் காந்தி:- கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும். இந்திய நாட்டில் ஜனநாயகம் என்பது தனிநாயகமாக மாறி வருகிறது. ஆகவே இந்திய நாட்டில் யார் ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும், எந்த கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் ஒரு 10 ஆண்டுகள் சுழற்சியில் கண்டிப்பாக ஒரு மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் ஊறித்திழைத்த அரசியல்வாதிகளும், அவர்களது அரசு நிர்வாகத்தினரும் ஜனநாயத்தை சர்வாதிகார முறையில் மாற்றிக்கொண்டு விடுவார்கள். ஆகவே கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம் வேண்டும். அதேபோன்று மத்திய அரசின் ஆட்சி முறையை யாரும் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, வடநாட்டினரின் சிந்தனையின் தொகுப்பாக அமைந்து வருகிறது. தென்னிந்திய அரசியலில் வடமாநிலங்களைவிட சற்று ஆறுதலான வகையில் ஜனநாயக பாங்கும், மதச்சார்பின்மையும், நாட்டு ஒற்றுமை உணர்வுகளும், கல்வி, பொருளாதார வளர்ச்சிகளும் சிறப்பாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இந்த நல்ல அரசியல் போக்கு, இந்திய அளவில் எதிரொலிப்பதற்கு இந்த கர்நாடக தேர்தல் ஒரு சங்கநாதமாக ஒலித்து உள்ளது. கர்நாடகவில் நடந்துள்ள மாற்றம் இந்திய அளவில் நடக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.
மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு
அரியலூரை சேர்ந்த அழகு:- நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் அங்கு ஆண்டு கொண்டிருந்த பா.ஜனதா கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த தாக்கம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்றால் சில நேரங்களில் அது போன்ற வாய்ப்பை மக்கள் ஏற்படுத்துகின்றனர். அதாவது மாநிலத்தில் ஒரு கட்சிக்கும் மத்தியில் வேறு ஒரு கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கின்றனர். அதிலும் தற்போது பல மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகள் வெவ்வேறு விதமான மனப்பாங்குடன் செயல்பட்டு வருகின்றன. எனவே அவைகள் தேசிய கட்சியுடன் ஒன்றிணையுமா? என தெரியவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அதற்குள் மக்களின் பிரச்சினை, அவர்களின் மனப்பாங்கு, கட்சிகளின் எண்ணங்கள், கூட்டணிகள் உள்ளிட்டவை பொறுத்தே மாறுதல் ஏற்படுமா? என தெரியவரும்.
ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு
மீன்சுருட்டியை சேர்ந்த மீனாட்சி:- கர்நாடக மாநிலத்தில் கடந்த 10-ந்தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிலவரம் தெரியவந்தது. ஆளும் பா.ஜனதா கட்சி முன்பை விட குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதேபோல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மாற்றம் இருக்கும். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் எப்படி மாறி மாறி வந்ததோ அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் 2 முறை பா.ஜனதா அரசு நாட்டை ஆளுகிறது. எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவில் இருந்தது. ஆனால் தற்போது நடுத்தர வர்க்கத்தினர் இதனை வாங்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.