பெரம்பலூர்
பெரம்பலூர் டயானா நகரில் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?
|பெரம்பலூர் டயானா நகரில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார வளாகம்
பெரம்பலூர் ரோவர் வளைவில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் டயானா நகர் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்களுக்கு வசதியாக நகராட்சி சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த சுகாதார வளாகத்தில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனியாக கழிவறைகள் உள்ளன. இதனால் அந்த சுகாதார வளாகம் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், அந்த வழியாக செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
பராமரிப்பின்றி காணப்படுகிறது
ஆனால் தற்போது அந்த சுகாதார வளாகம் எவ்வித பராமரிப்பு இன்றியும், தண்ணீர் வசதியின்றியும் காணப்படுகிறது. மேலும் கழிப்பறைகளின் கோப்பைகள் சேதமடைந்துள்ளன. சில கழிவறைகளில் கதவுகள் இல்லை. அந்த சுகாதார வளாகம் தற்போது பயன்பாடில்லாமல் காட்சியளிக்கிறது. மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் வீடுகளில் கழிவறை இல்லாதவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
எனவே நகராட்சி நிர்வாகம் அந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதேபோல் பெரம்பலூர் நகராட்சியில் பல்வேறு இடங்களில் பராமரிக்கப்படாமலும், பயன்பாடின்றி காணப்படும் சுகாதார வளாகங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.