< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிரசித்தி பெற்ற கோவில் குளம் சுத்தம் செய்யப்படுமா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிரசித்தி பெற்ற கோவில் குளம் சுத்தம் செய்யப்படுமா?

தினத்தந்தி
|
16 July 2022 2:09 AM IST

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிரசித்தி பெற்ற கோவில் குளம் சுத்தம் செய்யப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிரகதாம்பாள் கோவில்

புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் பிரசித்தி பெற்றதாகும். மன்னர்கள் காலத்தில் குல தெய்வ கோவிலாகவும் இருந்து வந்தது. ஆன்மிக சுற்றுலா வருபவர்கள் பிரகதாம்பாள் கோவிலுக்கு வந்து செல்வது உண்டு. கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் வருகையும் அதிகமாக உள்ளது. இந்த கோவிலின் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகே குளம் ஒன்று காணப்படுகிறது. இந்த குளத்தில் இருந்து பிரகதாம்பாள் கோவில் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தீா்த்தம் எடுத்து செல்லப்படுவது வழக்கம். மேலும் பொதுமக்களும் குளிப்பார்கள்.

இந்த நிலையில் இக்குளம் தற்போது சுகாதார கேடாக காணப்படுகிறது. குளத்தின் கரைகளிலும், தண்ணீரிலும் மதுப்பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த குளக்கரை பயன்பட்டு வருவதாக பக்தர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் இந்த குளம் போதிய அளவில் பராமரிக்கப்படாததால் தாமரை செடிகள் மற்றும் பாசிப்படர்ந்து காணப்படுகிறது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குளத்தின் தண்ணீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் இந்த குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் கோவிலுக்குரிய தீர்த்தங்கள் குடிநீர் குழாயில் பிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்குளத்தை சுத்தம் செய்ய பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குளத்தின் கரைகளில் அமர்ந்து மதுக்குடிக்க விடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பெரிய குளம் என அழைக்கப்படும் இக்குளத்தினை பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த குளத்தின் அருகே தான் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்