பெரம்பலூர்
வேப்பந்தட்டை அரசு பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்படுமா?
|வேப்பந்தட்டை அரசு பள்ளியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.
வேப்பந்தட்டை:
பழமைவாய்ந்த பள்ளி
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உயர்நிலைப் பள்ளியாகவும், பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் வேப்பந்தட்டை, பாளையூர், தொண்டபாடி, வெண்பாவூர், வடகரை, பாண்டகப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து பயின்று வருகிறார்கள். இதில் தற்போது 10-ம் வகுப்பில் 66 மாணவ- மாணவிகளும், 11-ம் வகுப்பில் 91 மாணவ- மாணவிகளும், 12-ம் வகுப்பில் 90 மாணவ-மாணவிகளும் படிக்கின்றனர்.
தாலுகா தலைமை இடமான வேப்பந்தட்டையில், 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாக இருந்த போதிலும் இந்த பள்ளிக்கு இதுவரை அரசு தேர்வு மையம் அமைக்கப்படவில்லை. இதனால் ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எசனை அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் 5 கிலோ மீட்டர் தொலைவில் அன்னமங்கலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று தேர்வு எழுதி வருகிறார்கள். இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கோரிக்கை
எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைத்து, அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அந்த பள்ளியிலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
கூடுதல் கட்டிட வசதி
பள்ளியின் மேலாண்மை குழு துணை தலைவர் நடராஜன்:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியில் தேர்வு மையம் அமைக்க அரசு அனுமதி அளித்து வந்தது. தற்போது அரசு அந்த விதியை தளர்த்தி கட்டிட வசதி உள்ள பள்ளிக்கு அனுமதி வழங்கலாம் என்று உத்தரவிட்டு உள்ளது. எனவே பழமை வாய்ந்த வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தமிழக அரசு கூடுதல் கட்டிட வசதியை ஏற்படுத்தி கொடுத்து, அனைத்து மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில், இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையம் அமைக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தேர்வு மையம்
பள்ளியில் படிக்கும் ஒரு மாணவரின் தந்தை கார்த்திகேயன்:- கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கல்வி அதிகாரி, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதும் மையம் அமைப்பதற்கு, அரசு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு மையத்திற்கான அனுமதி கிடைத்துவிடும் என்று கூறினார். எனவே மாணவ-மாணவிகள் பாதுகாப்பு கருதி இந்த பள்ளியிலேயே தேர்வு எழுதும் மையம் அமைக்க அங்கீகாரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவ-மாணவியும் தான் பயிலும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதும்போது மனதளவில் பயம் ஏற்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. எனவே தேர்வு மையத்தை வேப்பந்தட்டையிலேயே அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதுவார்கள்
பள்ளி மாணவர் சிவசூரியன்:- இந்த கல்வியாண்டில் படிக்கும் மாணவ-மாணவிகள் வெளியூரில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதி வருகிறோம். ஆனால் வருகிற கல்வி ஆண்டில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த பள்ளியிலேயே தேர்வு எழுதும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாணவி காருண்யா:- வெளியூருக்கு சென்று தேர்வு எழுதுவதால் மாணவ-மாணவிகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் அலைச்சலும், சிரமமும் ஏற்படுகிறது. சில சமயங்களில் காலை நேரத்தில் அவசர, அவசரமாக புறப்பட வேண்டிய நிலையும் உள்ளது. இந்த நிலையை தவிர்க்க வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வருங்காலங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மாணவ, மாணவிகள் அலைச்சலின்றி, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதுவார்கள்.
சிரமங்களை தவிர்க்க...
மாணவர் சுபாஷ்:- நாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம் இருந்தால், சிரமம் இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படும். வெளியூர் பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதும்போது சில அசவுகரியங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைத்து தர வேண்டும்.
மாணவி ஐஸ்வர்யா:- அரசு பள்ளியில் படிக்கும் எங்களை போன்ற ஏழை மாணவிகள் வெளியூர் சென்று தேர்வு எழுத வேண்டும் என்றால் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் என யாராவது ஒருவர், ஒவ்வொரு நாளும் வேலையை விட்டு எங்களுடன் வந்து தேர்வு எழுதும் வரை காத்திருந்து, பின்னர் அழைத்து வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இப்பள்ளியில் தேர்வு மையம் அமைந்தால், அது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.