< Back
மாநில செய்திகள்
ரெயில் போக்குவரத்துக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரெயில் போக்குவரத்துக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

தினத்தந்தி
|
11 Dec 2022 12:15 AM IST

ரெயில் போக்குவரத்துக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மக்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சி ஆகியவை உள்ளன. மேலும் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், தியாகதுருகம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் என மொத்தம் 102 ஊராட்சிகளும் உள்ளன.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 922 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 62 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 441 வாக்காளர்கள் உள்ளனர்.

ஏமாற்றம்

மாவட்டத்தின் தலைநகராக உள்ள கள்ளக்குறிச்சி தொகுதி முழுவதும் நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், மரவள்ளி, மணிலா, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகம் சாகுபடி செய்வதால், பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் கோமுகி, மணிமுக்தா, மயூரா ஆகிய ஆறுகளால் விவசாயம் செழிப்பாக உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் தனியார் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளது. ஆனால் பொது மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிறுவனங்கள் அமைக்கவில்லை என்பது பொதுமக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

புறநகர் பேருந்து நிலையம்

கள்ளக்குறிச்சியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் வெளிவட்ட சாலை அமைக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும் புறவழிச்சாலையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் மரவள்ளி கிழங்கு பயிரிடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கூட்டுறவு ஜவ்வரிசி ஆலை அமைத்து தர வேண்டும். போட்டித் தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்களின் நலன் கருதி மாவட்ட மைய நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.

மழைக் காலங்களில் மழை நீர் உடனடியாக வெளியேறும் வகையில் கழிவு நீர் கால்வாய்களை செப்பனிட்டு தூர்வார வேண்டும் என்பதே நகர மக்களின் அடுத்தடுத்த கோரிக்கைகளாகும்.

மேம்பாலம்

இதுதவிர வரதப்பனூர் கிராமத்தில் இருந்து உலகியநல்லூர் கிராமம் வரை செல்லும் சாலையில் மயூரா ஆற்றின் குறுக்கே மற்றும் சிறுமங்கலத்தில் இருந்து பெருமங்கலம் செல்லும் வழியிலும் மயூரா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம், சிறுவத்தூர் மந்தைவெளியில் வாரச் சந்தை நடைபெறும் பகுதியில் சிமெண்டு தளம், தியாகதுருகம் ஒன்றியம் பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் செல்லும் சாலையில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

நின்னையூர் கிராமத்தில் இருந்து கூத்தக்குடிவரை செல்லும் சாலையில் வனப்பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரம் சாலையோரத்தில் முட்புதர்கள் மண்டி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும். தியாகதுருகம் அருகே வடதொரசலூர், பானையங்கால், நின்னையூர் ஆகிய ஊராட்சிகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும்.

சேதமடைந்த நிலையில் வீடுகள்

தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தியாதுருகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த மலையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.

சின்னசேலம் பகுதியில் உலகை நல்லூர் அம்மகளத்தூர் ஈசாந்தை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் அமைத்து தரப்பட்டன. இவைகள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே புதிய வீடுகள் அமைத்து தர வேண்டும். உலகிய நல்லூர் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் முற்றிலும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளும் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன.

இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரெயில் வசதி

இதுகுறித்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி கூறுகையில், கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம், சென்னை போன்ற நகரங்களுக்கு அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் ரெயில் வசதி இல்லை. எனவே கள்ளக்குறிச்சி- சின்னசேலம் ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அவ்வாறு ரெயில் சேவை தொடங்கும்போது போக்குவரத்து நெரிசல் குறையும்.

மேலும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயப்பாளையம், தியாகதுருகம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ளவர்கள் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து நேரடியாக துணிகளை வாங்கி வந்து விற்பனை செய்தால் ஜவுளி தொழில் வளர்ச்சி அடையும். மேலும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி, உரம் இறக்குமதி செய்யும் பணியும் நடைபெறும் என்றார்.

குடிநீர் பிரச்சினை

கள்ளக்குறிச்சி நேபால் தெருவை சேர்ந்த வக்கீல் குமார்:-

ரிஷிவந்தியம்-மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2000-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து சின்னசேலம் வரை 60 கி.மீ. தூரத்திற்கு ராட்சத குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாடாம்பூண்டி, லாலாபேட்டை, பாசார், மாடூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நீர் உந்து நிலையங்கள் மூலம் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே நிரந்தர தீர்வாக அந்தந்த பகுதியில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்