திருவாரூர்
ஆபத்தான வளைவில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?
|ஆபத்தான வளைவில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த தரைப்பாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள கிளியனூர், மாதாகோவில் கோம்பூர் தெருவில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலை உள்ளது. வெண்ணாற்றின் கரையோரத்தில் அமைக்கப்பட்ட இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள், டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் குறுக்கே கட்டப்பட்ட காக்கையாடி பாசன வாய்க்கால் மேல் பகுதியில் உள்ள தரைப்பாலம் மற்றும் தடுப்பு சுவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
ஆபத்தான வளைவு
சேதமடைந்த தரைப்பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் சாலை ஆபத்தான வளைவாகவும் உள்ளது. இதனால் ஆபத்தான வளைவையும், சேதமடைந்த தரைப்பாலத்தையும் கடந்து சென்று வருவதில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று வருவோர் வளைவில் பாலம் இருப்பது தெரியாமல் ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான வளைவையும், சேதமடைந்த தரைப்பாலத்தையும் சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் புதிதாக தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.