மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
|மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
சென்னை,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை.
பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
எந்தெந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன, எந்தெந்த பணிகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தான தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும். பாஜகவின் சாதனையாகக் கூறிக்கொள்ளும் எய்ம்ஸ் பெயரில் புனைவுகள்தான் உலவுகின்றன.
எனவே, திட்டத்தின் உண்மை நிலை குறித்து வெளிப்படையாக விளக்கி விட்டு, உரிய நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவமனையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.