விருதுநகர்
வத்திராயிருப்பில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?
|வத்திராயிருப்பில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சதுரகிரி கோவில்
வத்திராயிருப்பு நகர் பகுதி வழியாக தினமும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. அத்துடன் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் வரும் பக்தர்கள் இந்த வழியாக தான் செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, தூத்துக்குடி, ராஜபாளையம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான வாகனங்கள் வத்திராயிருப்பு வழியாக சென்று வருகின்றன.
புறவழிச்சாலை
இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த வத்திராயிருப்பு நகரில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
அத்துடன் இந்த சாலையில் வாகனம் பழுதாகி நின்றால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. ஆதலால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நிலவுவதால் இந்த பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
ஆதலால் வத்திராயிருப்பில் புறவழிச்சாலை அமைத்தால் பல்வேறு வாகனங்கள் புறவழிச்சாலை வழியே செல்லும்போது போக்குவரத்து நெருக்கடி குறையும்.
இதனால் புறவழிச்சாலை அமைப்பதற்கு இடங்களை தேர்வு செய்து உடனடியாக அதற்கான பணியினை தொடங்க வேண்டும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
ஆதலால் இந்த போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக வத்திராயிருப்பு பகுதியில் புறவழிச்சாலை அமைத்து சீரான போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.