< Back
மாநில செய்திகள்
கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கிடைக்குமா?
கரூர்
மாநில செய்திகள்

கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கிடைக்குமா?

தினத்தந்தி
|
1 July 2022 12:27 AM IST

வெள்ளியணை கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கிடைக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிளை நூலகம்

கரூர் மாவட்டம் வெள்ளியணையில் 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கிளை நூலகம் தொடங்கப்பட்ட காலத்தில் குறைந்த அளவு புத்தகங்கள் மட்டுமே இருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் நூலகத்திற்கு வந்து செய்தித்தாள்களை வாசிப்பதற்கும், புத்தகங்களை எடுத்து சென்று படிப்பதற்கும் குறைந்த அளவு பொதுமக்களே வந்து சென்றனர். இப்படி குறைந்த அளவு பொதுமக்களே நூலகத்திற்கு வந்ததற்கு காரணம் அந்த காலகட்டத்தில் வெள்ளியணை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே ஆகும்.

ஆயிரக்கணக்கான புத்தகம்

அதனால் மிக சிறிய கட்டிடமே அப்பொழுது நூலகத்திற்கு போதுமானதாக இருந்தது. ஆனால் தற்பொழுது வெள்ளியணை மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிகப்படியான குடியிருப்புகள் உருவாகி உள்ளதால் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களில் பலரும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக பல்வேறு தலைப்புகளில் பொதுமக்கள் படித்து பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் அரசு ஆயிரக்கணக்கான புத்தகங்களை நூலகத்திற்கு அனுப்பி வைக்கிறது.

காற்றோட்ட வசதி

அந்த வகையில் தற்போது வெள்ளியணை கிளை நூலகத்தில் அதிகப்படியான புத்தகங்கள் மிக குறுகலான இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகங்களை பொதுமக்கள் தாங்களாகவே தேடி எடுத்து படிக்கலாம் என்று கருதினால், புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதியில் நுழைந்து வருவது மிகவும் சிரமம்.அதே போல் நல்ல காற்றோட்ட வசதி, மற்றும் வெளிச்சத்துடன் அதிகப்படியானவர்கள் அமர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலை சுத்தமாக இந்த நூலகத்தில் இல்லை.

எதிர்பார்ப்பு

இதனால் அரசின் பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற போட்டி தேர்வு எழுதும் இப்பகுதி இளைஞர்கள் நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து அமர்ந்து படித்து குறிப்புகளை எடுத்து செல்லும் வகையில் இருக்கை வசதிகள் அமைக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் கிளை நூலகத்தில் இடவசதி இல்லாமையே ஆகும். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் போதுமான இட வசதியுடன் கூடிய புதிய கிளை நூலக கட்டிடம் கட்டப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக கூறும் சமூக ஆர்வலர்களும், வாசகர்களும், அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு உள்ளனர்.

மேலும் செய்திகள்