< Back
மாநில செய்திகள்
கொல்லிமலைக்கு 3-வது பாதை அமைக்கப்படுமா ?
நாமக்கல்
மாநில செய்திகள்

கொல்லிமலைக்கு 3-வது பாதை அமைக்கப்படுமா ?

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

பேளுக்குறிச்சியில் இருந்து ஒத்தக்கடை வரை சுமார் 20 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் கொல்லிமலைக்கு 3-வது பாதை அமைக்கப்படுமா? என 5 ஊராட்சிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கொல்லிமலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,300 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு உயர்ந்த சிகரம் 4,663 அடி உயரம் கொண்டது ஆகும். இந்த மலையில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவை நாடுகள் என அழைக்கப்பட்டு வருகின்றன. இங்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

கொல்லிமலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, வியூ பாயிண்டுகள், படகு இல்லம், தாவரவியல் பூங்கா என சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. இதனால் இங்கு தினசரி சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

3-வது பாதை அமைக்கப்படுமா?

கொல்லிமலைக்கு செல்வதற்கு தற்போது காரவள்ளி வழியாக ஒரு பாதையும், முள்ளுக்குறிச்சி வழியாக மற்றொரு பாதையும் உள்ளன. காரவள்ளி வழியாக செல்லும் பாதை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும். இந்த பாதையில் சென்று வந்தால் இயற்கை காட்சிகளை காண முடியும். ஆனால் 2.5 மணி நேரம் ஆகும் என்பதால் களைப்பு ஏற்படும்.

முள்ளுக்குறிச்சி பாதையில் கொண்டை ஊசி வளைவுகளின் எண்ணிக்கை குறைவு. இருப்பினும் இந்த பாதையை பயன்படுத்த சேந்தமங்கலம், நாமக்கல், எருமப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரைபகுதியில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். எனவே கொல்லிமலைக்கு பேளுக்குறிச்சி வழியாக 3-வது ஒரு பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

குறிப்பாக இந்த பாதை பெரக்கரைநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு மற்றும் திருப்புளிநாடு ஊராட்சிகளில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

விரைவான மருத்துவ வசதி

இது குறித்து ஒத்தகடை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி கூறியதாவது:-

நாங்கள் அவசர மருத்துவ தேவைக்கு முள்ளுக்குறிச்சி வழியாக ராசிபுரம் செல்ல சுமார் 50 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மிகவும் அபாய கட்டத்திற்கு சென்று விடுகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. பேளுக்குறிச்சி வழியாக பாதை அமைந்தால், ராசிபுரத்திற்கு 15 கி.மீட்டர் தொலைவு தான் இருக்கும். அவ்வாறு அமைக்கப்படும்போது உடல்நலம் பாதிக்கப்படுவோர் விரைந்து மருத்துவ வசதி பெற முடியும்.

இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்ல தற்போது 83 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த பாதை அமைந்தால், 25 கி.மீட்டர் பயணம் செய்தால் போதும். இதேபோல் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் நவீன வசதிகளையும் பெற முடியும். மேலும் கொல்லிமலையின் பிரதான சாலையான காரவள்ளி-செம்மேடு சாலையில் ஏதாவது இடர்பாடு என்றால், இப்பாதை மாற்றுப்பாதையாக அமையும்.

பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி

சொட்டபிலாத்தி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்:-

தற்போது நாங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல 89 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. பேளுக்குறிச்சி வழியாக புதிய பாதை அமைத்தால், 30 கி.மீட்டர் தொலைவில் வந்து சேரலாம். எங்கள் பகுதியில் விளையும் விளைபொருட்களை நாங்கள் தற்போது பேளுக்குறிச்சி சந்தைக்கு நடந்தே எடுத்து செல்கிறோம். இப்பாதை அமைந்தால், பொருட்களை சந்தைக்கு எளிதாக எடுத்து செல்ல முடியும்.

எங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி படிக்க பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்ல வேண்டும் என்றால், ராசிபுரம் அல்லது நாமக்கல் செல்ல வேண்டும். இப்பாதை அமைந்தால், அவர்கள் விரைவில் சென்று வர முடியும். தற்போது பாதை வசதி சரியாக இல்லாத காரணத்தால் 5 ஊராட்சிகளிலும் பெண் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்காமல், திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள்.

குறிப்பாக சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரிக்கு இப்பாதை அமைந்தால் 5 கி.மீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்தால் போதும். ஆனால் தற்போது 4 பஸ்களில் ஏறி, சுமார் 70 கி.மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. ஒத்தகடையில் இருந்து முள்ளுக்குறிச்சி வரை 23 கி.மீட்டருக்கு போதிய பஸ்வசதியும் இல்லை. எங்களில் பெரும்பாலான நபர்கள் விவசாயம் சார்ந்த வேலை இல்லாதபோது நாமக்கல்லில் சுற்றி உள்ள பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளுக்கும் வேலைக்கு செல்கின்றனர். இப்பாதை அமைந்தால் வேலைக்கு சென்று வர எளிதாக இருக்கும். மொத்தத்தில் இப்பாதை அமைந்தால், 5 ஊராட்சிகளை சேர்ந்த மக்களின் மருத்துவம், கல்வி, பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்