< Back
மாநில செய்திகள்
தஞ்சையில் 140 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை நினைவுச்சின்னமாக ஆக்கப்படுமா?
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில் 140 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை நினைவுச்சின்னமாக ஆக்கப்படுமா?

தினத்தந்தி
|
14 Aug 2022 7:38 PM GMT

தஞ்சையில் 140 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை நினைவுச்சின்னமாக ஆக்கப்படுமா?

தஞ்சையில் சுதந்திர போராட்ட வீரர் ராஜாஜி கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட இடமான 140 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை நினைவுச்சின்னம் ஆக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சுதந்திர போராட்டம்

இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திரம் அடைந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி புரிந்து வந்தனர். அப்பேது இந்தியாவில் சுதந்திரத்திற்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆங்கிலேயர்கள் அடக்குமுறைகளை கையாண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுதந்திரத்திற்கான வேட்கை அதிகரித்து போராட்டங்கள் தொடங்கிய நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்களை அடைப்பதற்கான சிறைகளை ஆங்கிலேயர்கள் அமைத்தனர்.

தஞ்சையில் சிறை

அதன்படி தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில் 1885-ம் ஆண்டு சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே சிறைச்சாலை 52 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. நடுவில் கண்காணிப்பு கோபுரம் உள்ளது. அந்த கண்காணிப்பு கோரத்தில் இருந்து சூரிய கதிர்களைப் போல 8 வளாகங்கள் உள்ளன. ஒவ்வொரு வளாகத்திற்கும் 31 அறைகள் கொண்ட இந்த சிறைச்சாலை அழகிய தோற்றத்துடன் காணப்பட்டு வந்தது.

மேலும் அவ்வப்போது ஆங்காங்கே சிறைச்சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு வந்துள்ளன. சிறைச்சாலையின் நுழைவு வாயிலின் அருகே 1905-ம் ஆண்டு தரைதளம் மற்றும் முதல்தளங்களில் தலா 10 அறைகள் கொண்டு சிறைச்சாலைகளும் கட்டப்பட்டன. அதன் நேர் எதிரே தலா 5 அறைகள் கொண்ட கட்டிடங்களும் கட்டப்பட்டன.

ராஜாஜி அடைக்கப்பட்ட இடம்

இந்த சிறைச்சாலையில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை கைது செய்து அடைத்து வைத்து சித்ரவதை நடத்தியதாக வரலாறு உண்டு. சுதந்திர போராட்ட வீரர் மூதறிஞர் ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது வேதாரண்யத்துக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு தஞ்சையில் உள்ள சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பழமை வாய்ந்த இந்த சிறைச்சாலை பின்னர் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியாக மாற்றப்பட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்கள் வைத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது. மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்குமிடமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 8-ம் வகுப்பு வரை ராஜாஜி நடுநிலைப்பள்ளி தற்பொழுது இயங்கி வருகிறது.

நினைவுச்சின்னம் ஆக்கப்படுமா?

இந்த சிறைச்சாலை வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் உள்ள பல்வேறு சிறை கட்டிடங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. பல இங்களில் சிறை கட்டிடங்கள் பழுதடைந்து, புதர்கள் மண்டியும் காணப்படுகின்றன.

மேலும் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. தற்போது 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் தஞ்சையில் உள்ள பழமை வாய்ந்த சிறைச்சாலையை பராமரித்து பழமை மறாமல் புதுப்பிக்க வேண்டும். மேலும் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையில் அவர்களின் நினைவு கூரும் வகையில் இந்த சிறைச்சாலையை புனரமைத்து 140 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இந்த சிறைச்சாலையை பாதுகாக்க வேண்டும். நினைவு சின்னமாக ஆக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்