< Back
மாநில செய்திகள்
15 ஆண்டுகளாக விபத்தை ஏற்படுத்தி வரும் தார்சாலை புதுப்பிக்கப்படுமா?
கரூர்
மாநில செய்திகள்

15 ஆண்டுகளாக விபத்தை ஏற்படுத்தி வரும் தார்சாலை புதுப்பிக்கப்படுமா?

தினத்தந்தி
|
29 May 2023 10:29 PM IST

108 ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை, கர்ப்பிணிகள்-நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். 15 ஆண்டுகளாக விபத்தை ஏற்படுத்தி வரும் தார்சாலை புதுப்பிக்கப்படுமா? என ெபாதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

குக்கிராம மக்கள்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் மஞ்சாநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழக்கே உடையாபட்டிக்கு தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலையை உடையாபட்டி, பழனி செட்டியூர், முத்துரங்கம் பட்டி, ரங்கபாளையம், ராமநாதபுரம், சுக்காம்பட்டி, தெற்கு பிச்சம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த குக்கிராம மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் புலியூர் மணப்பாறை மாநிலச் சாலையில் இருந்து இந்த சாலை பிரிந்து செல்வதால் வெளியூரை சேர்ந்த பலரும் பஞ்சப்பட்டி அய்யர்மலை, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காகவும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு...

இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கரூர் பகுதியிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பஸ் மற்றும் வேன்கள், கல்லூரி, பள்ளி வாகனங்கள், சரக்கேற்றி செல்லும் வாகனங்கள் என அதிக வாகனங்கள் இரவு பகல் என எல்லா நேரமும் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையானது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

அதன் பின்னர் தொடர்ந்து இந்த சாலையை பராமரிப்பு செய்யாமல் விட்டுவிட்டதால், தற்போது இந்த சாலையின் பல பகுதிகளும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது.

கோரிக்கை

இந்த சாலையை பயன்படுத்தும் 108 ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் விரைந்து செல்ல முடியாத நிலையில் கர்ப்பிணிகள், வயதானவர்கள், ஆகியோரை ஏற்றி செல்லும்போது அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வாகனத்தில் மெதுவாகவே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சில நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் கரூர் சென்று சிகிச்சை பெற காலதாமதம் ஏற்படுவதால் உயிரிழப்பு போன்ற ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சுமார் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையை புதுப்பித்து தர வேண்டுமென இந்த பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆபத்தில் சிக்குகிறோம்

முத்துரங்கம்பட்டியை சேர்ந்த தங்கவேல்:-

நான் வேலை நிமித்தமாக கரூருக்கு தினந்தோறும் மோட்டார் பைக்கில் சென்று வருகிறேன். எனது வீட்டிலிருந்து குண்டும் குழியுமான இந்த தார் சாலையை பயன்படுத்தி தான் மஞ்சநாயக்கன்பட்டி சென்று பின்னர் கரூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குண்டும், குழியுமான இந்த சாலையால் எங்கள் ஊரில் இருந்து மஞ்சநாயக்கன்பட்டி செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இந்தச் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளை இயக்கும்போது தடுமாறி கீழே விழுந்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. அவ்வாறு எனக்கு தெரிய பலரும் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர். இந்த சாலையை சீரமைத்து தர பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தோம் இதுவரை சீரமைக்கப்படாமலேயே உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தந்தால் இந்த பகுதி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மிகவும் சிரமம்

ரங்கபாளையத்தை சேர்ந்த பிரபாகரன்:-

இந்த சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டது. இந்த சாலை போடப்பட்ட காலத்தில் சென்ற வாகனங்களை விட தற்போது பல மடங்கு வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றது. ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் கனரக டிப்பர் லாரிகள் கூட அடிக்கடி இந்த சாலையில் செல்கின்றன. சாலையில் ஆங்காங்கே சிறிய பள்ளங்கள் ஏற்பட்டபோது அடிக்கடி பராமத்து பணிகள் செய்திருந்தால் சாலை மிக மோசமான நிலையை அடைந்திருக்காது.

தொடர் பராமரிப்பின்மையால் மேலும் மேலும் வாகனங்கள் சென்றுவரும் போது சிறிய அளவில் இருந்த பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்து பெரிதாகி விட்டன. இதனால் தற்போது வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. என்னை போல் இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் தங்களின் வேலை நிமித்தமாக இந்த சாலையை பயன்படுத்தி வெளியிடங்களுக்கு செல்லவும், வெளியிடங்களை சேர்ந்தவர்கள் இந்த பகுதிக்கு வருவதற்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாலையை சீரமைத்து தந்தால் இப்பகுதி பொதுமக்களுக்கும், இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டீசல் செலவும் அதிகமாகிறது

பழனி செட்டியூரை சேர்ந்த நாகராஜ்:-

இந்தசாலை குண்டும் குழியுமாக இருப்பதால், இந்த சாலையை பயன்படுத்தி வந்த பலரும் தற்போது உடையாபட்டி செல்வதற்கு காணியாளம்பட்டி சின்னாண்டிபட்டி கோவில்பட்டி வழியாக சுமார் 6 கிலோமீட்டர் அதிகமாக சுற்றி வாகனங்களில் செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு காலநேர விரையத்துடன் பெட்ரோல், டீசல் செலவும் அதிகமாகிறது. இந்த சாலைக்கு பிறகு போடப்பட்ட சாலைகள் பலவும் தற்போது சீரமைக்கப்பட்டு புதியதாக போடப்பட்டுள்ளது.

பலமுறை இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என தேர்தல் நேரங்களில் வாக்கு கேட்டு வந்த வேட்பாளர்களிடம் முறையிட்டும் வெற்றி பெற்ற பின் அவர்களும் கண்டு கொள்ளவில்லை, அரசு அதிகாரிகளிடம் கோரிக்கையாக வைத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்தை இந்த சாலையை பயன்படுத்தும் இப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சந்தித்து வருகிறோம். இதன் பிறகாவது சாலை சீரமைக்கப்படுமா என்று பார்ப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்