அரியலூர்
தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?
|தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
பொறுமை இல்லை
சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை. அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.
அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அலங்காரம்
சிலைகளை வைப்பதுடன் சரி. பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம். தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை பொறுத்தவரை தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சி தலைவர்களின் சிலை ஏதும் சேதமடையவில்லை. அந்த சிலைகள் அனைத்தும் போதிய அளவு பராமரிக்கப்பட்டு தான் வருகிறது. இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ஆர். நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு:- மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது. தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாக சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும். இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.
சிவாஜி கணேசன் சிலை
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-
என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது. மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம். மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும்.
நிழற்குடை அமைக்க வேண்டும்
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த தங்ககாசி:- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களது சிலைகளும் நிழற்குடை இல்லாமல் காணப்படுகிறது. தலைவர்களின் நினைவுநாள், பிறந்தநாளின் போது சிலைகளை தூய்மை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது சிறப்புக்குரியது. அதேபோன்று அனைத்து நாட்களிலும் தூய்மை செய்து பராமரித்தால் இன்னும் சிறப்புக்குரியதாக இருக்கும். தலைவர்களின் சிலைகளை நிறுவினால் மட்டும் போதாது. நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பறவைகளின் எச்சங்கள் சிலைகள் மீது விழுந்து ஆங்காங்கே புள்ளி புள்ளியாக காணப்படுகிறது. இதனை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற உத்தரவிட்டது போன்று அனுமதியோடு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருக்கிறது.