< Back
மாநில செய்திகள்
கோடை விடுமுறையில் செயல்பாட்டுக்கு வருமா சிவகங்கை பூங்கா
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கோடை விடுமுறையில் செயல்பாட்டுக்கு வருமா சிவகங்கை பூங்கா

தினத்தந்தி
|
1 Jan 2023 1:44 AM IST

கோடை விடுமுறையில் செயல்பாட்டுக்கு வருமா சிவகங்கை பூங்கா

தஞ்சையில் ரூ.8 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிவகங்கை பூங்காவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து கோடை விடுமுறைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை நகராட்சி 1866-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1983-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சை மாநகராட்சி 36.31 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன.

இதில் தஞ்சை பெரியகோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது சிவகங்கை பூங்கா. தஞ்சை மாநகரில் தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, அருங்காட்சியகத்துக்கு அடுத்தபடியாக பொழுது போக்கு தலமாக விளங்கியது சிவகங்கை பூங்கா. ஆரம்பத்தில் சிறிய மரம், செடிகளுடன் காணப்பட்ட பூங்கா 1961-ம் ஆண்டு முதல் மிகப்பெரிய மாற்றம் கண்டது.

தொங்குபாலம்

சிறுவர் விளையாடும் இடம், மிருகங்கள், பறவை கூண்டுகள், நீச்சல் குளம், நீர்வீழ்ச்சிகள், அறிவியல் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. வெளியிடங்களில் இருந்து உயிர்வாழ் மிருகங்களும் கொண்டுவரப்பட்டன. சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் ரெயில், சிவகங்கை குளத்திற்கு மேல் செல்லும் வகையில் தொங்குபாலம் ஆகியவையும் செயல்பாட்டில் இருந்தன.

இந்த பூங்காவின் மொத்த பரப்பளவு 5.18 எக்டேர் ஆகும். இதில் உள்ள சிவகங்கை குளம் மட்டும் 2.60 எக்டேர் ஆகும். இந்த குளம் ஒரு காலத்தில் தஞ்சை மாநகருக்கு நீர் ஆதாரமாகவும் விளங்கி உள்ளது. இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள் சிதிலமடைந்ததை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ரூ.8 கோடியில் பணிகள்

அதன்டி ரூ.8 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித்தரும் வகையில் அமைந்துள்ள இந்த பூங்கா 3½ ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த பூங்காவில் கல்தளம் பதிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள சிறிய மண்டபங்களும் புனரமைக்கப்பட்டுள்ளது. இன்னும் செயற்கை நீரூற்றுகள், புல்தரை பதிக்கும் பணி, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

இரும்பு கேட் அமைப்பு

தற்போது பூங்காவின் சுற்றுச்சுவர் பகுதிகளில் இரும்பு கேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்குள் சிவகங்கை பூங்காவில் பணிகளை முடித்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடைய நிலவுகிறது.

விரைந்து முடிக்க வேண்டும்

இது குறித்து தஞ்சை கரந்தையை சேர்ந்த சரவணன் கூறுகையில், சரித்திர புகழ்மிக்க தஞ்சை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று சிவகங்கை பூங்கா. வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த பூங்கா செயல்பட்டு வந்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலும் நவீனப்படுத்தும் வகையில் பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் கடந்த 3½ ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கு இடமாக இருந்த பூங்கா மூடிக்கிடப்பது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. எனவே பணிகளை விரைந்து முடித்து, வருகிற கோடை விடுமுறைக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே இதற்கான பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட வேண்டும்.

மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்

தஞ்சையை சேர்ந்த லதா கூறுகையில், தஞ்சையை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு பொழுது போக்கு இடமாக திகழ்ந்த சிவகங்கை பூங்கா 3½ ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக்கிடக்கிறது. இதில் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் எப்போது முடியும் என்று தெரிய வில்லை. கோடை விடுமுறைக்குள் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால், தஞ்சை மக்களுக்கு மட்டும் அல்லாது, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும். மேலும் தஞ்சை மாநகராட்சிக்கும் பெருமளவில் வருவாய் கிடைக்கும். எனவே சிவகங்கை பூங்காவை நவீனப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்