திருவாரூர்
வழிகாட்டி பலகைகள் வைக்கப்படுமா?
|வழிகாட்டி பலகைகள் வைக்கப்படுமா?
லெட்சுமாங்குடி நான்கு வழி சாலை முகப்பில் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு வழி சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு திருவாரூர் சாலை, மன்னார்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை, கொரடாச்சேரி சாலை என நான்கு வழி சாலை உள்ளது. இத்தகைய நான்கு வழி சாலைகளிலும் கும்பகோணம், திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களின் வழித்தடங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
வழிகாட்டி பலகைகள்
திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் செல்லும் வழிகாட்டி பலகைகள் சற்று தூரத்தில் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த வழிகாட்டி பலகைகளை வாகன ஓட்டிகள் பெரும்பாலும் கவனிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் லெட்சுமாங்குடி நான்கு வழி முகப்பில் வழிகாட்டி பலகை இல்லாததால் எந்த ஊருக்கு செல்லவேண்டுமோ அந்த ஊருக்கு வழி கேட்டு வருகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் எந்த வழி சாலையில் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் தினறுகின்றனர்.
எனவே லெட்சுமாங்குடி நான்கு வழி சாலை முகப்பில் திருவாரூர், மன்னார்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் ஊர்களை குறிப்பிட்டு கீழ்பகுதியில் வழிகாட்டி பலகைகள் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.