விழுப்புரம்
செஞ்சி கோட்டை சுற்றுலா மையமாக மாற்றப்படுமா?
|செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தின் கலைத்திறன் மிக்க கோட்டை கொத்தளத்துடன் விளங்குவது செஞ்சிக்கோட்டை ஆகும். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு இணையாக செஞ்சிக்கோட்டை விளங்கி வருகிறது. 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்த செஞ்சியை தலைமையிடமாக கொண்டு கோனார் வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர்.
இதையடுத்து கடந்த 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்த கோனார் இயற்கை எழிலும், நீர் வளமும் நிறைந்த 3 மலைகளையும், 2 சிறிய குன்றுகளையும் இணைத்து செஞ்சி கோட்டையை கட்டினார்.
கோனார் வம்சத்தினரும் அடுத்து வந்த விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் கோட்டையின் பராமரிப்பை பிரமாண்ட முறையில் செய்தனர். மேலும் கோட்டையை சுற்றி பெரிய சுற்று மதில்களையும், அதை சுற்றி நீர் நிரம்பிய அகழிகளையும் அமைத்து வலுவான கோட்டையாக மாற்றினர். இங்கு வந்து ஆண்டு கணக்கில் போர் புரிந்தாலும், கோட்டையை முற்றுகையிட்டாலும் உள்ளே இருந்தே போர் புரியும் வகையில் இடம் மற்றும் போர்க்கருவிகள் தயாரிக்கும் வசதிகள் உள்ளிட்டவை சிறந்த கட்டிடக்கலை நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
கம்பீரமாக நிற்கும் கோட்டை
இது தவிர மூலிகை காடுகள், வற்றாத நீர் நிலைகள், விவசாயம் செய்ய பெரும் நிலப்பரப்பு உள்ளிட்டவையும் உள்ளது. மேலும் கோட்டைக்குள் கலைநயம் மிக்க கல்யாண மஹால், குதிரைலாயம், தர்பார்மண்டபம், அரண்மனை பகுதி, வெங்கட்ரமணர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் என நாம் கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத வகையில், கோட்டைக்குள் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அவற்றை முழுமையாக பெற்றுள்ளதே செஞ்சிக்கோட்டையின் சிறப்பம்சமாகும். பல்வேறு மன்னர்களால் பலப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு இயற்கை சீற்றங்களையும் கடந்து இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது.
இன்றும் இந்தியாவின் மிகப்பெரிய கற்க்கோட்டைகளில் ஒன்றாக செஞ்சி கோட்டை விளங்குவது சிறப்பம்சமாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் அதிகமாக கண்டு களித்த இடங்களில் 4-வது இடத்தை பிடித்தது செஞ்சிக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமையை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவும், செஞ்சி கோட்டையை அழியாமல் காக்கவும் செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தொல்லியல் துறை
இருப்பினும் இது வரை எந்த பலனும் கிடைக்கவில்லை. கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து இங்கு வரும் அரசியல் கட்சியினர் பலரும் செஞ்சி கோட்டையை சுற்றுலா தளமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் தங்களது வாக்குறுதிகளை இது வரை நிறைவேற்றவில்லை. இருப்பினும் செஞ்சிக்கோட்டை மத்திய தொல்லியல் துறை சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருந்தது இருந்தபடியே என்ற நிலையில் கோட்டையை பாதுகாத்து வருகின்றனர்.
ஆனால் கோட்டையை சுற்றி பார்க்க வரும் மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மந்திரியாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சி கோட்டைக்கு ரோப் கார் விடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதுவும் நடைபெறாமல் நின்றுவிட்டது. தமிழக அரசால் சுற்றுலா மையமாக அறிவித்தாலே அடுத்தடுத்து சுற்றுலா மையத்திற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு அங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது தமிழக அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் கடந்த தேர்தலின் போது செஞ்சிக்கோட்டை சுற்றுலா மையமாக மாற்றப்படும் என அறிவித்தார். மேலும் தேர்தல் அறிக்கையிலும், செஞ்சி கோட்டை தேசிய மற்றும் பன்னாட்டு சுற்றுலா மையமாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்து இருந்தார். அவர் அறிவித்தப்படி செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
கண்டுகொள்ளவில்லை
இது குறித்து செஞ்சியை சேர்ந்த சந்திரன் கூறுகையில்:- மிகவும் பழமை வாய்ந்த உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் பார்த்து வியந்து செல்லும் வகையில் உள்ள செஞ்சிக்கோட்டையை மத்திய அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. தற்போது அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான் செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்வார் என நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம். அவரால் செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல மலைப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைபோல் செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக மாற்ற அவர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
கட்டிடக்கலையின் சிறப்பு
இல்லோடு வசந்தகுமார் கூறுகையில்:- செஞ்சிக்கோட்டை. எப்போதோ சுற்றலா மையமாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் நம் பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சரியான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளாததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. செஞ்சி கோட்டையை சுற்றுலா மையமாக அறிவித்து தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், செஞ்சி பகுதி வளர்ச்சி அடையும். மேலும் நமது கட்டிடக்கலையின் சிறப்புகளை நம்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் எளிதில் அறிந்து கொள்ள முடியும். எனவே செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .