< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா?

தினத்தந்தி
|
9 Jan 2023 12:34 AM IST

‘டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா? பொதுநல விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.

பீடி, சிகரெட்டு புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று விளம்பரப்படுத்திக்கொண்டு விற்பனை செய்வது போல், குடி, குடியைக் கெடுக்கும் என்று விளம்பரம் செய்துகொண்டு மதுவை விற்றுவருகிறோம்.

அரசுக்கு அதிக வருவாய் வரும் துறைகளில் 'டாஸ்மாக்' முக்கியப்பங்கு வகிக்கிறது. விலை ஏறினாலும் மதுபானங்கள் விற்பனை மட்டும் குறைவது இல்லை. மதுபோதைக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

சமூக வலைத்தளம்

ஆண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்து, போலீசாரிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் செய்த அலப்பறையை யாரும் மறந்திருக்க முடியாது.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் இது பின்பற்றப்படுவது இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கைகளிலும் மதுபாட்டில்கள் தவழ்வதை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் 'வீடியோ' பதிவுகள் மூலம் காண முடிகிறது.

மது ஒருபுறம் சமூகத்தைச் சீரழித்து வந்தாலும், இன்னொருபுறம் மதுவுக்கு எதிராக குரல் ஒலித்துக் கொண்டுதான் வருகிறது.

பொதுநல வழக்கு

ஒட்டுமொத்த இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மது விற்பனையை கட்டுப்படுத்த, அதன் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு நடந்து வருகிறது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், '21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். பொது நலன் கருதி 'டாஸ்மாக்' கடைகளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் யோசனையை அரசு பரிசீலிக்குமா? 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? இதுபற்றி பொதுநல விரும்பிகள் என்ன கருதுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி

தொம்பகுளத்தை சேர்ந்த இல்லத் தரசி நிர்மலா நேரு:-

பொது இடங்களில் போதை ஆசாமிகள் முகம் சுழிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் கோவில்கள், பள்ளிகள் ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால் பெண்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் சூழல் உள்ளது. ஒரு சில கடைவீதிகளில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதை கூட நாம் காணலாம்.

மதுக்கடை திறக்கும் நேரம் குறைப்பு என்பது மது பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் எண்ணற்ற பேருக்கு இது மகிழ்ச்சி தர கூடிய செய்தியாக உள்ளது. எனவே தமிழக அரசு இனியும் காலம் தாமதிக்காமல் மதுக்கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

குணம் மாறி விடுகிறது

திருச்சுழியை சேர்ந்த ராஜாமணி:- மது அருந்துபவர்கள் நிதானம் இல்லாமல் மனைவியை அடித்து உதைக்கும் நிலை நிறைய பேர் வீடுகளில் உள்ளது. அத்துடன் கடினப்பட்டு சிறுக, சிறுக சேர்த்த நகைகளை ஒரு சில வீடுகளில் குடும்பத்தலைவன் மதுவிற்காக பிடுங்கி செல்லும் நிலை உள்ளது.

மதுபழக்கத்திற்காக அவன் இயல்பான குணத்தில் இருந்து மாறுபட்டு விடுகிறான். இதனால் பாதிக்கப்படுபவர்கள் மனைவி, குழந்தைகள் தான். என்ன தான் கடை திறக்கும் நேரத்தை மாற்றினாலும் பெண்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை.

கல்வியை நிறுத்தும் நிலை

சரோஜா (அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சிவகாசி ஒன்றியம்):- இளைஞர்கள் அதிகம் பேர் குடிபழக்கத்துக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். குடிபழக்கத்தால் பல ஆண்கள் தங்களது குடும்பதை கவனிக்காமல் கிடைக்கும் வருமானத்தை மது குடிக்க செலவு செய்து வருகிறார்கள். இதனால் பெண்கள் பொருளாதார அளவில் மிகுந்த பாதிப்பு அடைந்து வருகிறார்கள். பல குடும்ப தலைவிகள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்ப போதிய வசதி இல்லாமல் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இது அனைத்திற்கும் மது தான் காரணம். நீதிமன்ற உத்தரவின் படி மதுக்கடை திறக்கும் நேரத்தை மாற்றினால் பெண்கள் தற்போது சிக்கி தவிக்கும் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க நீதிமன்றத்தின் இந்த யோசனையை உடனே செயல்படுத்த வேண்டும்.

அரசு சலுகை

டாக்டர் செல்வராஜன்:-

மதுவால் பல்வேறு குடும்பங்கள் பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். மது விற்பனையை கட்டுப்படுத்துவதன் மூலமே மது பழக்கத்தை படிப்படியாக குறைக்க முடியும். அரசு வரும் காலங்களில் ஆதார் கார்டு மூலம் மது விற்பனை செய்ய வேண்டும். மேலும் ஆதார் கார்டு மூலம் மது வாங்குபவர்களுக்கு அரசு சலுகை கிடையாது என்பதை அறிவிக்க வேண்டும். அப்ேபாது தான் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். மனவலிமையுடன் எந்த ஒரு பிரச்சினையையும் எதிர் கொள்ளக்கூடிய பக்குவம், தைரியம் இருந்தால் மட்டுமே மது பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள். தோல்வியை சந்தித்தாலும் வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டாலும் மது ஒரு தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுபோதையிலிருந்து விடுபட ஏராளமான மருந்துகள் இருந்தாலும் மன பக்குவத்தால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும்.

சிகிச்சை மையங்கள்

ராஜபாளையம் மாதர் சங்க நகர செயலாளர் மேரி:- மதுபான கடைகள் நேரம் மாற்றம் குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து திறக்கும் நேரத்தை பொதுமக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்த வேண்டும். 2 மணி முதல் 8 மணி வரை மதுக்கடைகள் திறக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. ஏற்கனவே 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் 24 மணி நேரமும் செயல்படும் மதுக்கடையாகத்தான் அனைத்து மது கடைகளும் இயங்கி வருகிறது. மதுக்கடைகளால் பல குடும்பம் சீரழிந்து இருக்கிறது. பல பெண்கள் வாழ்க்கை இழந்துள்ளார்கள். சிறுவயதிலேயே மதுப்பழக்கம் ஏற்பட்டு இளைஞர்கள் கல்வி இழந்து தவறான பாதையில் செல்லும் போக்கு அதிகரித்து இருக்கிறது.

எனவே மது கடைகளை முழுவதுமாக அடைக்க வேண்டும். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்களை மீட்டெடுக்க சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

மதுபிரியர் சிவக்குமார்:-

மனதில் உள்ள சோகத்தை குறைக்க தான் மது குடிக்கிறோம். நாங்கள் மது குடிப்பதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. அரசின் நிதி நெருக்கடியை குறைப்பதில் மதுக்கடைகளின் பங்கு மகத்தானது. என்ன தான் விலை அதிகரித்தாலும் நாங்கள் வாங்கி குடிக்க தான் செய்கிறோம். மது விற்பனை நேரத்தை குைறப்பதன் மூலம் எண்ணற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இரவில் 9 மணிக்கு வேலை முடிந்து விட்டு செல்பவர்களுக்கு மது கிடைக்காத நிலை ஏற்படும். அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு நேரக்குறைப்பு அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மது விற்பனை நேரத்தை குறைப்பதன் மூலம் இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அவலநிலையும், மதுபிரியர்களின் மனநிலையும் மாறும் என்ற பொதுநலன் சிந்தனையோடு நீதிபதிகள் 'டாஸ்மாக்' கடை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், இது கள்ளச்சந்தை மது விற்பனையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகள்