< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா?
பெரம்பலூர்
மாநில செய்திகள்

'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்படுமா?

தினத்தந்தி
|
8 Jan 2023 11:10 PM IST

பீடி, சிகரெட்டு புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று விளம்பரப்படுத்திக்கொண்டு விற்பனை செய்வது போல், குடி குடியைக்கெடுக்கும் என்று விளம்பரம் செய்துகொண்டு மதுவை விற்றுவருகிறோம்.

'டாஸ்மாக்' கடைகள்

அரசுக்கு அதிக வருவாய் வரும் துறைகளில் 'டாஸ்மாக்' கடைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. விலை ஏறினாலும் மதுபானங்கள் விற்பனை மட்டும் குறைவது இல்லை. மதுபோதைக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. ஆண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்து, போலீசாரிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் செய்த அலப்பறையை யாரும் மறந்திருக்க முடியாது.

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் இது பின்பற்றப்படுவது இல்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கைகளிலும் மதுபாட்டில்கள் தவழ்வதை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் 'வீடியோ' பதிவுகள் மூலம் காண முடிகிறது. மது ஒருபுறம் சமூகத்தைச் சீரழித்து வந்தாலும், இன்னொருபுறம் மதுவுக்கு எதிராக குரல் ஒலித்துக் கொண்டுதான் வருகிறது.

பொதுநல வழக்கு

'ஒட்டுமொத்த இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மது விற்பனையை கட்டுப்படுத்த, அதன் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு நடந்து வருகிறது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அந்த பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், '21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். பொது நலன் கருதி 'டாஸ்மாக்' கடைகளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் யோசனையை அரசு பரிசீலிக்குமா? 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் குறைக்கப்படுமா? இதுபற்றி பொதுநல விரும்பிகள் என்ன கருதுகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.

மது உற்சாகப் பானமா?

தமிழ்நாடு மதுக் குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன்:-

தமிழகத்தில் மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டும் என்பதை வலியுறுத்தி பல அரசியல் கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று ஏமாற்றத்துடன் தான் திரும்பி வந்துள்ளனர். அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற கருத்தை நீதிபதிகள் முன்வைத்து வருகிறார்கள்.

தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி அன்று 'போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றது. இதில் ஹான்ஸ், குட்கா போன்ற போதைப் பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் மதுபானம் இடம் பெறவில்லை. எனவே மதுபானம் போதைப் பொருளா? உற்சாகப் பானமா? என்ற குழப்பத்தில் நாங்கள் இருக்கிறோம். மதுவுக்கு எதிராகப் போராடி வரும் அரசியல் கட்சி தலைவர்கள் இதை தெளிவுப்படுத்த வேண்டும். அரசு டாஸ்மாக் சரக்குகள் போதைப் பொருள் என நிரூபித்து அரசிதழில் வெளியிட வைப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

தற்போது மதுக்கடைகள் திறப்பு நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு பரிந்துரைத்து இருப்பது மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வயலப்பாடியை சேர்ந்த முத்துலட்சுமி:- வீட்டில் குடும்ப தலைவர் மது குடிப்பதால் இல்லத்தரசிகள் நிம்மதியை இழக்க வேண்டி உள்ளது. குழந்தைகளின் படிப்பும் கவனிக்க முடியாமல் போகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுடன், மதுவால் கணவரின் உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. அந்த குடும்பம் நிதியை இழந்து சமுதாயத்தில் நிற்கதியாக நிற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதுவெல்லாம் மதுக்கடையை திறக்கப்படுவதாலேயே நடைபெறுகிறது. அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டால் அனைத்து இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இளைய சமுதாயமும் நல்வழிப்படும். எனவே மதுக்கடை திறப்பதை அரசு தடை செய்து பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பெரம்பலூரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சிலம்பரசன்:- ரிக் வேத காலங்களிலும் மது பழக்கம் இருந்ததாக தகவல் உள்ளன. சங்க இலக்கிய காலங்களிலும் மது அருந்துவதற்கு ஆதரவு இருந்துள்ளது. மேலும் அற இலக்கியங்களில் முதன்மையான திருக்குறளில் முதல் முதலாக மது போதைக்கு எதிராக சிந்தனையை 'கள்ளுண்ணாமை' என்ற அதிகாரம் வாயிலாக திருவள்ளுவர் நமக்கு எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் சிறந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாட்டில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவதாகவும், அதற்கு மது போதை தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் குற்றச் செயல்களுக்கும் மது போதை தான் காரணம். இளைஞர்களில் சிலர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்களில் சிலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி வந்ததால் பள்ளிகளில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மதுவுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த தமிழகத்தில் பூரண மது விலக்கு படிப்படியாக கொண்டு வர வேண்டும்.

தற்போது மதுரை ஐகோர்ட்டு தமிழகத்தில் மதுக்கடைகளில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று உத்தரவிட்டும், மதுக்கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்கவும் பரிந்துரை செய்ததை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த நடைமுறையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில் அமல்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

வரவேற்கிறோம்

டாஸ்மாக் கடை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் மது அருந்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களில் சிலர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் தான் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடை விதித்தும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்கவும் மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மது விற்பனை நேரத்தை குறைப்பதன் மூலம் இந்தியாவில் மது விற்பனையில் தமிழ்நாடு முதலிடம் என்ற அவலநிலையும், மதுபிரியர்களின் மனநிலையும் மாறும் என்ற பொதுநலன் சிந்தனையோடு நீதிபதிகள் 'டாஸ்மாக்' கடை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தாலும், இது கள்ளச்சந்தை மது விற்பனையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

டேட்டா கார்னர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 37 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மட்டும் ஒரேநாளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனையாகிறது.

மேலும் செய்திகள்