ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிக்கான தேர்வு மாற்றப்படுமா? டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
|பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், தென் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சென்னை,
ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சேவைகளில் வரும் பல்வேறு துறைகளில் உள்ள 369 என்ஜினீயரிங் பணிக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 13-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. அதன்படி, இந்த பணிக்கான தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரத்து 132 ஆண்கள், 19 ஆயிரத்து 496 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 59 ஆயிரத்து 630 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இவர்களுக்கான தேர்வு வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 202 தேர்வு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே அங்குள்ள தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் டி.என்.பி.எஸ்.சி. ஏற்கனவே திட்டமிட்டபடியே தேர்வை நடத்த உள்ளது.