< Back
மாநில செய்திகள்
கிராமப்பகுதியில் சாலைகள் மேம்படுத்தப்படுமா?
கரூர்
மாநில செய்திகள்

கிராமப்பகுதியில் சாலைகள் மேம்படுத்தப்படுமா?

தினத்தந்தி
|
27 Nov 2022 12:18 AM IST

புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி கிராமப்பகுதியில் சாலைகள் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சிபகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கிராமத்திற்குள் உள்ள பெரும்பாலான சாலைகள் அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ளது. இதனால் தற்போது சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் சாலைகளே இல்லை.இதனால் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி பொதுமக்களால் நடந்து செல்லவே முடிவதில்லை. மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் பெரியவளைப்பாளையம் கிராமத்தில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து செங்கல் மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் தூண்கள் ஆகியவற்றை உடைத்து குண்டும், குழியுமான சாலைகளில் போட்டு சாலை அமைத்து வைத்துள்ளனர். இருப்பினும் அந்த சாலை மழை காலத்தில் சரியாக இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

நிதி ஒதுக்கி சீர் செய்ய வேண்டும்

புஞ்சை கடம்பங்குறிச்சி பகுதியில் கோரை வியாபாரம் செய்து வரும் பிச்சைமுத்து:-

புஞ்சை கடம்பங்குறிச்சி கிராமப்பகுதியில் பல ஆண்டுகளாக நான் வியாபாரம் செய்து வருகிறேன். இங்கு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலத்தில் சாலை, சாலையாகவே இருக்காது. சேறும், சகதியுமாக இருக்கும், பலமுறை நாங்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் கொடுத்தும் பலன் இல்லை. அப்போது அவர்கள் சாலை அமைத்து தருகிறோம் என்று கூறுகிறார்கள். பெரியவளைப்பாளையம் பகுதி மக்கள் சேறும், சகதியுமான சாலையில் கற்களை போட்டு தாங்களே சாலை அமைத்து உள்ளனர். இருப்பினும் ஊராட்சி நிர்வாகம் இதற்காக நிதி ஒதுக்கி அந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

விவசாய பொருட்கள் கொண்டு செல்ல சிரமம்

கடம்பங்குறிச்சியை சேர்ந்த விவசாயி கண்ைணயன்:-

நான் விவசாய தொழில் செய்து வருகிறேன். எங்கள் ஊருக்குள் செல்ல தார் சாலை போட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் நாங்கள் விவசாய பொருட்களை வயல்களுக்கு எடுத்து செல்லவே மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அச்சத்துடனே வருகிறேன்

விவசாய கூலி தொழிலாளி மருதையன்:-

நான் தினமும் காட்டு வேலைக்கு சென்று வருகின்றேன். இதனால் எனது வீட்டில் இருந்து வேலைக்கு செல்ல பஸ் நிறுத்தம் வரை நடந்து செல்ல வேண்டும். ஆனால் அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வரும்போது ஒருவித அச்சத்துடனே சென்று வருகிறேன். மேலும் இந்த சாலையில் சைக்கிள் கூட ஓட்டிச் செல்ல முடியாது. இதனால் மழைக்காலங்களில் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இதனால் அன்று எங்களுக்கு ஒருநாள் பிழைப்பே போய்விடும்.

கடும் அவதி

தொழிலாளி குமாரசாமி:-

நான் தினமும் கரூர் உள்பட பல ஊர்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருவேன். பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் தான் செல்வேன். ஆனால் இந்த குண்டும், குழியுமாக உள்ள சாலையால் பல தடவை கீழே விழுந்து உள்ளேன். இரவு நேரத்தில் வரும்போது பயந்து கொண்டே வருவேன். மழை காலங்களில் எங்கு பள்ளம் உள்ளது என்று தெரியாமல் பலர் அந்த குழியில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அந்த நேரத்தில் வெளியூர் செல்வது என்பது மிகவும் கஷ்டம். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர் என பல்வேறு தரப்பினரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்