< Back
மாநில செய்திகள்
தமிழக கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? 2 நாட்களில் தெரியவரும்
மாநில செய்திகள்

தமிழக கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? 2 நாட்களில் தெரியவரும்

தினத்தந்தி
|
29 July 2024 6:40 AM IST

10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? என்பது 2 நாட்களில் தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

பிரதமராக மோடி தொடர்ந்து 3-வது முறையாக கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், புதிய கவர்னர்களை நியமித்தும், கவர்னர்களை மாற்றம் செய்தும் திரவுபதி முர்மு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, மராட்டியம், புதுவை உள்பட 10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மராட்டிய கவர்னராக தமிழகத்தை சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் கவர்னராகவும் இருந்து வந்த சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுள்ளார். இவர் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்த நிலையில், அந்த மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுவைக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே கைலாச நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கவர்னராக இருந்து வரும் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இன்னும் 2 தினங்களில் முடிவடைய உள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற ஆர்.என்.ரவி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் உள்பட சில மந்திரிகளை சந்தித்து பேசினார். ஜனாதிபதியை சந்திக்க இருந்த நிலையில், அதற்கான நேரம் கிடைக்காமல் தமிழகம் திரும்பினார். இதனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தெலுங்கானா, புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களுக்கு புதிதாக கவர்னர்களை நியமித்தும், 3 மாநிலத்தின் கவர்னர்களை மாற்றம் செய்தும் உத்தரவிட்ட திரவுபதி முர்மு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் ஆர்.என்.ரவிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? அல்லது அவருக்கு பதிலாக தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவாரா? என்பது தொடர்பான புதிருக்கு இன்னும் 2 தினங்களில் விடை கிடைத்துவிடும்.

மேலும் செய்திகள்