தஞ்சாவூர்
கும்பகோணம் ரெயில் நிலையம் வாசலில் செடி-கொடிகள் அகற்றப்படுமா?
|கும்பகோணம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பின்றி செயல்படாமல் உள்ள தண்ணீர் வழங்கும் தானியங்கி எந்திரத்தை சரி செய்ய வேண்டும். ரெயில் நிலைய வாசல் அருகில் வளர்ந்துள்ள செடி-கொடிகள் அகற்றப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் ரெயில் நிலையம்
கும்பகோணம் ரெயில் நிலையம் 145 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் நகரமான கும்பகோணம் பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்ல ரெயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி தினமும் ஏராளமானவர்கள் இந்த ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் கும்பகோணம் வழியாக வந்து செல்கின்றன. வெளியூர்களில் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமான கும்பகோணம் ெரயில் நிலையத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.
கட்டணம் குறைவு
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லவும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல முக்கிய வழித்தடமாக தஞ்சை, கும்பகோணம் வழியாக ரெயில் பாதை இருந்தது. இந்த வழித்தடம் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது கும்பகோணம் வழியாக சென்னை, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ்சை காட்டிலும் ரெயிலில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். இதனால் கும்பகோணம் ரெயில் நிலையம் எப்பொழுதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
செயல்படாத தானியங்கி எந்திரம்
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு கட்டணம் செலுத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டது. இந்த எந்திரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 300 மி.லி., 500 மி.லி, 1 லிட்டர், 2 லிட்டர், 5 லிட்டர் என குறிப்பிட்ட தொகைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை பொதுமக்களே நாணயங்களை செலுத்தி தண்ணீரை பெற்று வந்தனர். இந்த எந்திரம் உரிய பராமரிப்பு இன்றி செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கூடுதல் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
புதர்மண்டி கிடக்கிறது
இதே போல் ரெயில் நிலையத்தில் நுழைவு வாசலில் சிறிய பூங்கா போன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. ஆனால் அவற்றுடன் தேவையற்ற செடி- கொடிகளும் வளர்ந்து வருகின்றன. இதனால் ரெயில் நிலைய வாசல் அருகே புதர்மண்டி காணப்படுகிறது.
இங்கு பாம்பு, பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் செடி- கொடிகளை அகற்றி பூச்செடிகள், மற்றும் மூலிகை செடிகள் வளர்க்க நடவடிக்கை வேண்டும் என்றும், செயல்படாத தண்ணீர் வழங்கும் தானியங்கி எந்திரத்தை சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.