< Back
மாநில செய்திகள்
பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
1 Sept 2023 1:33 AM IST

நெல்லை-தென்காசி இடையே அமைக்கப்படும் 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணியின் விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நெல்லை-தென்காசி இடையே ரூ.431 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது. இதில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் நிறைந்த பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தொடங்கி, கடந்த 1 ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் 900 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 44 தூண்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. தற்போது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் ரோட்டில் அதாவது இடதுபுறம் 2 வழிக்கான பகுதியில், போக்குவரத்து தடைபடாமல் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்துக்கு கிழக்கு பகுதியில் 13 தூண்களும், மேற்கு பகுதியில் 9 தூண்களும் அமைக்கப்பட்டு உள்ளது. தென்காசி செல்லும் இடதுபக்க பகுதியில் இருவழிக்கான பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

பொதுவாக தண்டவாளத்துக்கு மேலே அமைய இருக்கும் பாலம் பகுதி கட்டுமானத்தை மட்டும் ரெயில்வே துறை நேரடியாக மேற்கொள்ளும். இந்த நிலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையே செய்து கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் ரெயில்வே கேட்டின் மேல் பகுதியில் இதுவரை எந்தவித பணியும் செய்யவில்லை.

இதுதொடர்பாக கோரிக்கை விடுத்திருந்த, குறும்பலாபேரியை சார்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவருக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரி பதில் அளித்து உள்ளார். அதில், "பாவூர்சத்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதிக்கான வரைபடம், மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் அந்த பகுதியில் வேலை தொடங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரெயில்வே அதிகாரிகள் தரப்பில், "குறிப்பிட்ட நேரத்தில் வரைபடங்களை வழங்காமலும், போதிய காலஅவகாசம் தராததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் கேட்கும் கூடுதல் தகவல்களையும் உடனடியாக வழங்கினால் வரைபட ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ராஜசேகர பாண்டியன் கூறுகையில், "தற்போது இந்த வழித்தடத்தில் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கேட் அதிக தடவை மூடப்படுவதோடு, வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக ரெயில்வேக்கு பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால வரைபடம் சம்பந்தமான போதுமான தகவல்களை கொடுத்து குறித்த நேரத்தில் ஒருங்கிணைப்பு செய்து மேம்பால பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.

பாவூர்சத்திரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்