தஞ்சாவூர்
சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?
|காவிரி பாசன பகுதி சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருக்காட்டுபள்ளி;
காவிரி பாசன பகுதி சம்பா சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மேட்டூர் அணை
தமிழகத்தின் உணவுத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் காவிரி பாசன பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்குமா என்று கவலையில் விவசாயிகள் உள்ளனர். மேட்டூர் அணையில் நீர் இருப்பு நேற்று மாலை நிலவரப்படி 9.687 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1430 கன அடியாக இருந்தது. நீர்திறப்பு 6500 கன அடியாகஇருந்தது. மேட்டூர் அணையில் இருந்து இன்னும் எத்தனை நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று நீர் வளஆதார துறை அறிவிக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதியில் இருந்து மேட்டூர் அணையில் இருந்து 6500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
குறுவை சாகுபடி
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாயில் முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறைந்தஅளவு தண்ணீர் அதுவும் முறைப் பாசனம் முறையில் தண்ணீர் திறப்பதால் கடை மடைபகுதி குறுவைப் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் குறையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பாசன மாவட்டங்களில் பல இடங்களில் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. பல இடங்களில் குறுவை கதிர் வந்து கொண்டுள்ளன. குறுவை நிலைமை இவ்வாறு இருக்க சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிப்பு பணிகளை விவசாயிகள் தொடங்காமல் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மழையை பொறுத்து சம்பா நாற்றங்கால் பணிகள் தொடங்கலாம் என்று விவசாயிகள் எண்ணிக் கொண்டு உள்ளனர். இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி ஆற்றில் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை தினமும் 3000 கன அடி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.இதனால் பாசனப்பகுதியில் பயிர்செய்யப்பட்டுள்ள குறுவை பயிர் முழுமையாக விளைவதற்கும், சம்பா சாகுபடி மேற்கொள்ளவும் வடகிழக்கு பருவமழை அவசியம். அக்டோபர் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். எனவே வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காவிரி பாசன விவசாயிகள் உள்ளனர்.